சாரதா நிதி நிறுவன மோசடி: சிபிஐ விசாரணையில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு

சாரதா நிதி நிறுவன மோசடி: சிபிஐ விசாரணையில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு
சாரதா நிதி நிறுவன மோசடி: சிபிஐ விசாரணையில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு
Published on

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் சிபிஐ விசாரணையை கண்காணிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சாரதா நிதி நிறுவனம் மேற்கு வங்கத்தில் 239 தனியார் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமாக 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தங்கள் திட்டங்களில் முதலீடு செய்தால்‌ பெரும் லாபம் கிடைக்கும் எனக் கூறி லட்சக்கணக்கா‌ன சாமானிய மக்களிடம் இருந்து பெரும் தொகையை சாரதா நிறுவ‌னம் வசூலித்தது. அவ்வாறு சுமார் 17 லட்சம் பேரிடமிருந்து 4 ஆயிரம் கோடி ரூபாய் வரை திரட்டிய நிலையில், அதன் முறைகேடுகள் 2‌013ம் ஆண்டு அம்பலமாகியது. அதைத்தொடர்ந்து நிறுவனமே மூடப்பட்டது. இது முதலீட்டாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த மோசடியை விசாரிக்க தற்போது கொல்கத்தா காவல் ஆணையராக இருக்கும் ராஜிவ் குமார் தலைமையில், மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு அப்போது சிறப்பு விசாரணைக் குழுவை உடனடியாக அமைத்தது. சாரதா நிறுவன தலைவர் சுதிப்தோ சென் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் அளித்த வாக்குமூலத்தில் நிதி முறைகேட்டில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறிய தகவல் வெளியானது. இவ்வழக்கில் மேற்கு வங்க அமைச்சர் மதன் மித்ரா, முன்னாள் டிஜிபி ரஜத் மஜும்தார், எம்பிக்கள் இருவர் ஆகியோர் கைது‌ செய்யப்பட்டனர். 

இந்த வழக்கினை விசாரித்த ராஜிவ் குமார், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக நடந்துகொண்டதாகவும் முக்கிய ஆவணங்களை அழித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு அவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி 2014ம் ஆண்டு சிபிஐ வசம் சென்றது.

இந்த வழக்கு தொடர்பாக காவல் ஆணையர் ராஜிவ்குமாரை விசாரிக்க சிபிஐ அவரது இல்லத்திற்கே சமீபத்தில் சென்றது. ஆனால், மேற்குவங்க போலீசார் சிபிஐ அதிகாரிகளை உள்ளே விட மறுத்ததோடு, சிபிஐ தலையீட்டை கண்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டத்திலும் ஈடுபட்டார். 

பின்னர், உச்சநீதிமன்றத்திடம் சிபிஐ இதுகுறித்து முறையிட்டது. ராஜிவ் குமார் மீது கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்ட நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு அவர் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்தது. உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து மம்தா தனது போராட்டத்தை கைவிட்டார். 

இந்நிலையில், சிபிஐ விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சஞ்சிவ் கண்ணா ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக தற்போது நடைபெற்று வரும் சிபிஐ விசாரணையை கண்காணிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com