யோகா குருவான பாபா ராம்தேவ், ‘பதஞ்சலி’ என்ற பெயரில் ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்து வருகிறார். மேலும் இந்த நிறுவனத்தின் தலைவராகவும் அவர் உள்ளார். ஆயுர்வேத துறையில் பிரபலமான நிறுவனமாக விளங்கும் ’பதஞ்சலி’ தம் தயாரிப்புகளை மக்கள் மத்தியில் கொண்டுபோய்ச் சேர்க்கவும், பிரபலப்படுத்தவும் தவறான மற்றும் முறைகேடான விளம்பரங்களை வெளியிடுவதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து, பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத மருந்துகளுக்கான விளம்பரங்களில் தவறான தகவல்கள் இடம்பெறுவதைத் தடை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. குணப்படுத்தவே வாய்ப்பில்லாத பல்வேறு நோய்களையும், பதஞ்சலி தயாரிக்கும் ஆயுர்வேத மருந்துகள் குணப்படுத்தும் என அந்நிறுவனம் உண்மைக்கு மாறாக விளம்பரம் செய்வதாக இந்திய மருத்துவ சங்கம் குற்றம்சாட்டியது.
இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான பாபா ராம்தேவ், பகிரங்க மன்னிப்பு கோரியிருந்தார். எனினும், ”பாபா ராம்தேவ் கோரிய நிபந்தனையற்ற மன்னிப்பு வெறும் வாய்வார்த்தை” என பாபா ராம்தேவ் தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்ததுடன், ’நீதிமன்றத்திடம் அளித்துள்ள உறுதிமொழிகளை பாபா ராம்தேவின் நிறுவனம் பின்பற்ற வேண்டும்’ என்று அறிவுறுத்தி விசாரணையையும் தள்ளிவைத்தது.
இந்த நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பாபா ராம்தேவின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க மீண்டும் உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
“மன்னிப்பு என்கிற பெயரில் எதையாவது எழுதிக் கொடுத்துவிட்டு தப்பித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள். நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளையும் மீறிவிட்டு தற்போது மன்னிப்புக் கேட்டால் எப்படி ஏற்க முடியும்? மன்னிப்பை ஏன் எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்யவில்லை? மன்னிப்பு கேட்கும்போது மிக அலட்சியமாக நடந்துகொள்கிறீர்கள்; அதே அலட்சியத்தை நாங்கள் ஏன் உங்களுக்குக் காட்டக்கூடாது?
பதஞ்சலி நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளுக்கு எதிராக நாங்கள் ஏன் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது? அலட்சியமான உங்கள் மன்னிப்பை நாங்கள் நம்பவில்லை. இதை ஏற்கமுடியது. அதனால் நிராகரிக்கிறோம்” என பதஞ்சலியின் இரண்டாவது மன்னிப்பு பிரமாணப் பத்திரத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.