இந்தியாவின் ஜனநாயக தேர்தல் பெருவிழாவுக்கு மத்தியில், ஆம் ஆத்மி கட்சி பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அடுத்தடுத்து ஆம் ஆத்மியைக் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனினும், தன் பதவியை ராஜினாமா செய்யாமல் சிறையில் இருந்தபடியே உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். அதேநேரத்தில், அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் அடுத்த மாதம் 7-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தாம் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். முன்னதாக, இந்த மனுவை, டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
இந்த நிலையில், இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ”வாழ்க்கை மற்றும் சுதந்திரம் எப்போதுமே மிகவும் முக்கியம். அதனை நீங்கள் ஒருபோதும் மறுக்க முடியாது” என்று குறிப்பிட்டனர். அதைத் தொடர்ந்து கெஜ்ரிவால் தரப்பில், “டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. கெஜ்ரிவாலுக்கு எதிரான அமலாக்கத்துறை நடவடிக்கையில் 99% உண்மைத்தன்மை கிடையாது” என வாதம் வைத்தனர்.
இதையடுத்து, ”தேர்தலுக்கு முன் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? விசாரணை தொடங்கியதற்கும் கைது நடவடிக்கைக்கும் இடைவெளி அதிகம் உள்ளதே? கெஜ்ரிவால் மீதான வழக்கில் சொத்து முடக்கம் போன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே” என அமலாக்கத்துறையிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இதுதொடர்பான கேள்விகளுக்கு அடுத்த விசாரணையின் பதில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.