அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ய 3 வாரங்களுக்குத் தடை - உச்சநீதிமன்றம்

அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ய 3 வாரங்களுக்குத் தடை - உச்சநீதிமன்றம்
அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ய 3 வாரங்களுக்குத் தடை - உச்சநீதிமன்றம்
Published on

சோனியாகாந்தி மீது அவதூறு பரப்பும் விதமாக பேசியதாக அர்னாப் கோஸ்வாமி மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குப் பதிவுகளை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில் அவரை 3 வாரங்களுக்கு கைது செய்ய தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் துறவிகள் உள்ளிட்ட மூவர், கிராம மக்களால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ரிபப்ளிக் தொலைகாட்சியில் விவாவதம் ஒன்று நடைபெற்றது. அதில், இந்த கும்பல் கொலையை கண்டித்து ஏன் சோனியா காந்தி இன்னும் கருத்து தெரிவிக்காமல் மௌனம் காக்கிறார் என்று கேள்வியெழுப்பினார் ரிபப்ளிக் ஆசிரியர் அர்னாப். மேலும், சோனியா காந்தி மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியதாக தெரிகிறது.

இதனையடுத்து சோனியாகாந்தி மீது அவதூறு பரப்பும் விதமாக பேசியதாக அர்னாப் கோஸ்வாமி மீது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், தெலங்கானா, ஜம்மு காஷ்மீர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் புகார் அளித்துள்ளனர். இதனிடையே, நேற்று முன்தினம் இரவு பணி முடித்தபின் ஸ்டூடியோவில் இருந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த போது அர்னாப் கோஸ்வாமி மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் முகமூடி அணிந்துகொண்டு வந்து அவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் குறித்து போலீசார் ஐபிசி 341, 504 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்தியதாக 2 பேரை கைது செய்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ள அர்னாப், இது காங்கிரஸ்காரர்களின் வேலைதான் எனவும் தனக்கும், தனது குடும்பத்திற்கும் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு சோனியா காந்தியே காரணம் எனவும் குற்றம்சாட்டியிருந்தார்.

தனக்கு எதிராக பதியப்பட்டுள்ள புகார்களை தள்ளுபடி செய்யும் படி அர்னாப் கோஸ்வாமி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். அர்னாப் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் கொண்ட பெஞ்ச் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு வந்தது.

விசாரணையை நடத்திய உச்சநீதிமன்றம் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்ய 3 வாரங்களுக்கு தடைவிதித்து உத்தரவிட்டது. மேலும் அர்னாப் கோஸ்வாமிக்கும் ரிபப்ளிக் டிவி அலுவலத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மும்பை கமிஷ்னருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நாக்பூரில் உள்ள சதர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டதைத் தவிர, அவருக்கு எதிரான அனைத்து எஃப்.ஐ.ஆர்களையும் நீதிமன்றம் நிறுத்தியது. நாக்பூரில் உள்ள எஃப்.ஐ.ஆரையும் மும்பைக்கு மாற்றியுள்ளது. அது அங்கு விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com