கடந்த 2019-ஆம் வருடம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நிதி நெருக்கடி காரணமாக முடங்கியது. அந்த விமானச் சேவை நிறுவனத்தின் செயல்பாடுகள் முடங்கியநிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் நிதி மோசடி புகார்கள் காரணமாக கைதுசெய்யப்பட்டார். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நரேஷ் கோயல் தற்போது பிணை பெற்று மருத்துவச் சிகிச்சை பெற்று வருகிறார். நரேஷ் கோயல் நாட்டைவிட்டு வெளியேறக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாரத ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கடன் அளித்த வங்கிகள் தங்கள் கடன்களை வசூலிக்க நடவடிக்கை எடுத்தன. தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் மூலம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை உயிர்ப்பிக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
இந்த நிலையில், ஜலான்-கல்ராக் கூட்டணி முடங்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை உயிர்ப்பித்து மீண்டும் சேவைகளை தொடங்க முன்வந்தது. இதற்காக 350 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் எனவும், ஊழியர்களின் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு நிலுவைத் தொகைகளை செலுத்த வேண்டும் எனவும் ஜலான்-கல்ராக் கூட்டணிக்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதையடுத்து, ஜலான்-கல்ராக் கூட்டணி 200 கோடி ரூபாய் முதல் தவணையாக செலுத்தியது. மீதமுள்ள 150 கோடி ரூபாயை விரைவாக செலுத்த வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட கடன் அளித்த நிறுவனங்கள் வலியுறுத்திய நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் உரிமையை முதலில் கைமாற்ற வேண்டும் என ஜலான்-கல்ராக் கூட்டணி கோரிக்கை வைத்தது. மீண்டும் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் தலையிட வேண்டும் என ஜலான்-கல்ராக் கூட்டணி கோரிக்கைவைத்த நிலையில், கடனை வசூல் செய்ய காத்திருந்த பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
ஆனால் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஜெட் ஏர்வேஸ் உரிமையை ஜலான்-கல்ராக் கூட்டணி பேருக்கு மாற்ற வேண்டும் என உத்தரவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் மேல்முறையீடு செய்தன.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 7500 கோடி ரூபாய் கடனை திருப்பி தராமல் பாக்கி வைத்துள்ளது. மேலும் நிறுவனம் 2019 ஆம் வருடம் முதல் முடங்கியுள்ளதால், ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 22 கோடி கூடுதல் நஷ்டம் ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
ஜலான்-கல்ராக் கூட்டணி ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் முராரி லால் ஜலால் மற்றும் பிரிட்டனை சேர்ந்த கல்ராக் கேப்பிட்டல் என்கிற நிறுவனம் இணைந்து உருவாக்கிய கூட்டணியாகும். இந்தக் கூட்டணி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை உயிர்ப்பிப்பதற்கான நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை என கடன் வழங்கி உள்ள பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்டோர் மேல்முறையீட்டில் தெரிவித்தனர். ஆகவே அரசியல் சாசனத்தின் 142 வது பிரிவில் அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், உச்ச நீதிமன்றம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சொத்துக்களை விற்று, அதன் மூலம் கிடைக்கும் தொகையை கடன் கொடுத்த நிறுவனங்களுக்கு பகிர்ந்து அளிக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஜலான்-கல்ராக் கூட்டணி ஏற்கனவே 200 கோடி ரூபாய் தவணையையும் கைப்பற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு பெற்றுள்ளது. ஆகவே இந்த 200 கோடி ரூபாய் தொகை ஜலான்-கல்ராக் கூட்டணிக்கு மீண்டும் கிடைக்காது. இத்துடன் இனி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை உயிர்பிக்க வேறு வழி இல்லை என்கிற சூழ்நிலை உருவாகியுள்ளது.
திவாலாகும் நிறுவனங்களை உயிர்பிக்கவும் அதனால் ஏற்படும் நஷ்டங்களை குறைக்கவும் அமைக்கப்பட்டுள்ள தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாய நடைமுறை போதிய பலனை வழங்கவில்லை என்பதற்கு உதாரணமாக ஜெட் ஏர்வேஸ் வழக்கு அமைந்துள்ளது. ஜெட் ஏர்வேஸ் போலவே நிதி நெருக்கடியால் முடங்கியுள்ள கோ ஏர் விமான சேவை நிறுவனமும் மீண்டும் முயற்சிக்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.