தாஜ்மஹாலுக்கு அருகே உள்ள வாகன நிறுத்தங்களை அகற்றுமாறு மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ரா யமுனை ஆற்றங்கரையில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் அமைந்துள்ளது. இந்தக் கட்டடம் சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இது தொடர்பாக தாஜ்மஹாலை மாசுபாட்டில் இருந்து பாதுகாக்க வலியுறுத்தி சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்.சி.மேத்தா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மதன் பி லோகூர் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு தாஜ்மஹாலை சுற்றி ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாகன நிறுத்தங்களை 4 வாரங்களுக்குள் அகற்ற ஆக்ரா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தாஜ்மஹாலுக்கு அக்டோபர் 26-ம் தேதி பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.