18 முதல் 44 வயதுக்குட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி விலைக் கொள்கையை மறு ஆய்வு செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இது குறித்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் அமர்வு, தடுப்பூசி விலை நிர்ணயத்தில் உள்ள முரண்பாடு பொது மக்கள் ஆரோக்கியத்திற்கு எதிரானதாக இருப்பதுடன் அரசமைப்பு சட்ட விதிகளுக்கு மாறாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளது. அரசின் தடுப்பூசி விலைக்கொள்கை பணக்காரர்களுக்கு மட்டுமே சாதகமானதாக அமையும் என்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏழை, எளிய மக்களால் இயலாத நிலை ஏற்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மாநில அரசுகளே நேரடியாக தடுப்பூசியை கொள்முதல் செய்ய அனுமதிப்பதால் தேவையற்ற பல குழப்பங்களும் சச்சரவுகளும் ஏற்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 18 முதல் 44 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளும் தனியார் மருத்துவமனைகளும் உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதனால் அதிக விலை தருபவர்களுக்கு முதலில் தடுப்பூசி கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.