உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில், ‘புல்டோசர் நடவடிக்கை’ என்கிற பெயரில், குற்றம்செய்பவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்த புல்டோசர் நடவடிக்கை அதிகம் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்களின் வீடுகள் மீதே குறிவைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன. அம்னெஸ்டி இண்டர்நேஷனல் என்ற சர்வதேச அமைப்பானது இந்த புல்டோசர் நடவடிக்கை குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கையை வெளியிட்டிருந்தது.
அதன்படி, உ.பியில் கடந்த பிப்ரவரி மாதம் வரை 128 கட்டடங்கள் இடிக்கப்பட்டிருக்கின்றன. இதில் 617 பேர் பாதிக்கப்பட்டு இருக்கினறனர். இடிப்பு நடந்த பகுதிகள் அனைத்தும் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் இடத்தில்தான் நடந்திருக்கிறது என்று தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து இந்த புல்டோசர் நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பானது எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. அதாவது, ”ஒரு குடும்பத்தில் ஒரே ஒருவர் மட்டுமே குற்றவாளி என்பதற்காக மொத்த குடும்பமே வாழும் வீட்டை எப்படி இடித்துத் தள்ள முடியும்? மட்டுமல்லாது ஒருவர் மீது குற்றச்சாட்டு இருக்கிறது என்றாலே அவரது வீட்டை இடித்துவிட முடியுமா அல்லது அவர் குற்றவாளி என்று உறுதி செய்துவிட்டால்கூட அவரது வீட்டை இடிக்க யாருக்கு இங்கு அனுமதி இருக்கிறது” என்கிற வாதம் வைத்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இதுதொடர்பான விசாரணையின்போது, ’’புல்டோசர் நடவடிக்கை சட்ட விரோதமானது’’ என்று அறிவுறுத்தியதுடன், வீடுகளை இடிக்கவும் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த நிலையில், இதுதொடர்பான இறுதிக்கட்ட விசாரணைக்குப் பின், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (நவ.13) தீர்ப்பளித்தது.
அவர்கள், "ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வீடு வேண்டும் என்பது கனவு. ஒரு வீடு என்பது ஒரு குடும்பம் அல்லது தனிநபர்களின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பின் கூட்டு நம்பிக்கையின் உருவகமாகும். ஒருவரின் தங்குமிடத்தை அகற்ற நிர்வாகி அனுமதிக்கப்பட வேண்டுமா என்பதும் நீதிமன்றத்தின் முன் உள்ள முக்கியமான கேள்வி. இந்தக் கேள்வியைக் கருத்தில்கொள்ள, ஜனநாயக ஆட்சியின் அடித்தளமான சட்டத்தின் ஆட்சிக் கொள்கையை நாம் பரிசீலிக்க வேண்டும். தன்னிச்சையான அரசிலிருந்து தனிநபர்களுக்குப் பாதுகாப்பை வழங்கும் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளையும் நாங்கள் கருத்தில்கொள்ள வேண்டும். இந்த வழக்கில் குற்றவியல் நீதி அமைப்பில் உள்ள நியாயத்தை நாங்கள் கருத்தில்கொள்ள வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவர் என்கிற காரணத்தாலேயே அவரது வீடு இடிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அதுவும் அரசு அதிகாரிகள் சட்டத்தை கையில் எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றனர்.
தொடர்ந்து அவர்கள், “ஒருவரின் வீடு இடிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் ஆக்கிரமிப்பாக மட்டுமே இருக்க முடியும். சொத்து உரிமையாளருக்கு 15 நாட்களுக்கு முன் அறிவிப்பு வழங்காமல், சட்ட விதிகளை பின்பற்றாமல் கட்டடங்களை இடிக்கக் கூடாது. பதிவு செய்யப்பட்ட தபால் மூலம், உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். அதில், அங்கீகரிக்கப்படாத கட்டுமானத்தின் தன்மை, விதிமீறலின் விவரங்கள் மற்றும் இடிப்புக்கான காரணங்கள் குறிப்பிடப்பட வேண்டும். கட்டடம் இடிக்கப்படும்போது வீடியோ எடுக்கப்பட வேண்டும். வழிகாட்டுதல்கள் மீறப்படுமானால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும். சட்டத்தின் ஆட்சியும், குடிமக்களுக்கான உரிமைகளும் நிர்வாகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிரானது.
அத்தகைய நடவடிக்கைகளை சட்டம் மன்னிக்காது. சட்ட மீறல்கள் சட்டவிரோதத்தை ஊக்குவிக்கும். அரசியலமைப்பு ஜனநாயகத்தைப் பாதுகாக்க சிவில் உரிமைகளைப் பாதுகாப்பது அவசியம். ஒரு நிர்வாகி ஒரு நீதிபதியைப்போல் செயல்பட்டு, சட்டத்தின் செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு வீட்டை இடிக்க உத்தரவிட்டால் அது சட்டத்தின் விதியை மீறுவதாகும். குற்றம்சாட்டப்பட்டவர் அல்லது குற்றவாளிக்கு எதிராக அரசு தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க முடியாது. சில ஆக்கிரமிப்புகள் இருந்தாலும், இடிப்பது மட்டுமே அதற்கு ஒரே தீர்வு என்பதற்கான ஆதாரங்களை அதிகாரிகள் காட்ட வேண்டும்.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இந்த வழக்கில் நாங்கள் என்ன தீர்வை முன்வைத்தாலும் அதை அனைத்து குடிமக்களுக்காகவும், அனைத்து நிறுவனங்களுக்காகவும் வைக்கிறோம். ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு ஒரு சட்டம் இருக்க முடியாது அதேநேரத்தில், தெருக்கள், நடைபாதைகள், ரயில் பாதைகள், நீர்நிலைகள் போன்ற பொது இடங்களில் அங்கீகாரம் இல்லாத கட்டமைப்பு இருந்தால், அவற்றை இடிக்கும் வழக்குகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. எங்கள் உத்தரவு எந்த பொது இடத்திலும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு உதவாது என்பதை நாங்கள் உறுதி செய்வோம்” என தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.