’குழந்தையைக் கொல்ல முடியாது’ - 26 வார கரு விவகார வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து!

26 வார கருவைக் கலைக்க முடியாது என கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்ட்விட்டர்
Published on

3வது குழந்தையின் கருவைக் கலைக்க அனுமதி கோரி மனு

27 வயது நிரம்பிய திருமணமான பெண் ஒருவர், தன்னுடைய 26 வார கருவைக் கலைக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் அளித்த மனுவில், ‘தனக்கு ஏற்கெனவே 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், பொருளாதார ரீதியாகவும், மனரீதியாகவும் மூன்றாவது குழந்தையை வளா்க்கும் சூழ்நிலை இல்லை. கடுமையான மனஅழுத்தத்துக்கும் உள்ளாகியுள்ளேன். எனவே, மூன்றாவது முறையாக உருவாகியிருக்கும் கருவைக் கலைக்க அனுமதிக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.

pregnant
pregnantpt web

அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக முறையீடு

இந்த மனு, கடந்த அக்டோபர் 9ஆம் தேதி நீதிபதிகள் ஹிமா கோஹ்லி, பி.வி.நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அந்தப் பெண்ணின் கருவைக் கலைக்க அனுமதி அளித்து உத்தரவிட்டனர். இந்த உத்தரவு தொடா்பாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வுமுன்பு அக்டோபர் 10ஆம் தேதி முறையீடு செய்யப்பட்டது.

இதையும் படிக்க: உ.பி.: பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்பிக்க ஓடிய சிறுமி.. ரயில்முன் தள்ளி கொலை செய்ய முயற்சி!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவு

இதுகுறித்து சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வரியா பாட்டீ, ” ‘கருக்கலைப்பின்போது கரு உயிருடன் பிறப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. எனவே, கருக்கலைப்பின்போது கருவைக் கொலை செய்யவேண்டியிருக்கும்’ என மருத்துவ வாரியம் பரிந்துரை செய்துள்ளபோதிலும், கருக்கலைப்புக்கு அனுமதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனா்” எனக் குறிப்பிட்டார். இதைக் கேட்ட நீதிபதிகள் அமா்வு, பெண்ணின் கருவைக் கலைப்பதை நிறுத்திவைக்குமாறு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட்டனா்.

நீதிபதிகளின் இருவேறு மாறுபட்ட உத்தரவுகள்!

இதனிடையே, கருக்கலைப்பை அனுமதித்து பிறப்பித்த உத்தரவைத் திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசு சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, அதே அமா்வு முன்பாக, அக்டோபர் 11ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘நீதிமன்றம், எப்படி கருவின் இதயத்துடிப்பை நிறுத்தும்படி கூற முடியும்; மனுதாரரின் கருவைக் கலைக்க அனுமதிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை’ என நீதிபதி ஹிமா கோஹ்லி குறிப்பிட்டாா். ஆனால், மத்திய அரசின் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி பி.வி.நாகரத்னா, ‘நன்கு பரிசீலிக்கப்பட்ட பின்னரே கருவைக் கலைக்க அனுமதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது’ என்றாா்.

இதையும் படிக்க: உத்தரப்பிரதேசம்: சாலைப் பணியில் ஈடுபட்ட காவலரை செருப்பால் தாக்கிய பெண்... வைரலாகும் வீடியோ!

3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்ட வழக்கு

இப்படி, இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதை அடுத்து, இந்த வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணையை நடத்தியது. இந்த அமர்வில் டி.ஒய்.சந்திரசூட்டுடன் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா இருந்தனர்.

உச்ச நீதி மன்றம்
உச்ச நீதி மன்றம்PT

’இன்னும் ஒருசில வாரங்கள் கருவைச் சுமக்க முடியாதா?’ - உச்ச நீதிமன்றம் கேள்வி?

இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இன்னும் ஒரு சில வாரங்களுக்கு கருவை தக்கவைத்துக்கொள்ளுமாறு பெண்ணிடம் மத்திய அரசையும் அவரது வழக்கறிஞரையும் பேசுமாறு கேட்டுக் கொண்டது. மேலும், ”கடந்த 26 வாரங்கள் கருவைச் சுமந்த பெண்ணால், இன்னும் ஒருசில வாரங்கள் கருவைச் சுமக்க முடியாதா? அவ்வாறு செய்தால், ஆரோக்கியமான குழந்தை பிறக்குமே? எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்களிடம், ’கருவின் இதயத்துடிப்பை நிறுத்திவிடுங்கள்’ என எங்களைக் கூறவைக்க விரும்புகிறீர்களா?'' எனக் கேள்வி எழுப்பினர்.

இதையும் படிக்க: AsianGames | குஜராத்துக்கு நிதியை வாரி வழங்கிய மத்திய அரசு... ஆனாலும் ஒரு பதக்கம்கூட இல்ல!

’கருவில் இருக்கும் குழந்தையைக் கொல்ல முடியாது’ - உச்சநீதிமன்றம்

இதற்கு மனுதாரர் தரப்பில், அந்தப் பெண்ணின் நிலைமை பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இதைக் கேட்ட உச்சநீதிமன்றம், ’கருவில் இருக்கும் குழந்தையைக் கொல்ல முடியாது. அதேவேளையில், இது தாயின் உரிமையை கருத்தில்கொண்டு அணுக வேண்டும்'' எனக்கூறி வழக்கு விசாரணையை நாளை காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்தது

மருத்துவக் கருக்கலைப்புச் சட்டம் 1971-இன்கீழ் அதிகபட்சமாக 24 வார கருவை மட்டுமே மருத்துவ நடைமுறையின்கீழ் கலைப்பதற்கு அனுமதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 2011 உலகக்கோப்பை: அரையிறுதியில் சதத்தைத் தவறவிட்ட சச்சின்.. தற்போது விளக்கம் அளித்த சேவாக்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com