குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. மக்களிடம் போதிய வரவேற்பு இல்லாததால் திரைப்படம் திரையிடுவதை ரத்து செய்து இருக்கின்றன தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம். அதேநேரத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் திரைப்படத்திற்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மேற்குவங்க மாநிலம் இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து வித்தியாசப்பட்டது கிடையாது; அப்படி இருக்கும் பொழுது எதற்காக இந்த திரைப்படத்தை தடை செய்தீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பின்னர், திரைப்படத்தை தடை செய்தது தொடர்பாக விளக்கம் அளிக்க மேற்கு வங்க மாநில அரசுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் சிலவற்றில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், நாற்காலிகள் எரிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது; இது பொது அமைதி சார்ந்த விவகாரம். இந்த விவகாரத்தை வேறு விதமாக நாங்கள் அணுகுவோம் என தமிழ்நாடு அரசு சொல்வதை ஏற்க முடியாது; எனவே திரையரங்குகள் தாக்கப்பட்டது தொடர்பாகவும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவுப் பிறப்பித்து வழக்கினை அடுத்த வாரத்திற்கு தலைமை நீதிபதி ஒத்தி வைத்தார்.