பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்குகளில் மத்திய அரசிடமும், ரிசர்வ் வங்கியிடமும் விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக கடந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. தங்களிடம் உள்ள பழைய நோட்டுக்களை மாற்றிக்கொள்வதற்கு, பொதுமக்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்வதற்கு, கால அவகாசத்தை கூடுதலாக நீட்டிக்க வேண்டும் பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை இன்று விசாரித்த நீதிபதிகள், நேர்மையான காரணம் இருந்தால் தனிநபர்கள் ரூபாய் நோட்டுகளை ஏன் மாற்றக்கூடாது? என கேள்வியெழுப்பியதுடன், கால அவகாசம் அளிப்பது குறித்து மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் விளக்கம் அளிக்கவேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.