டெல்லி டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை குறித்து தவறாக கருத்து தெரிவித்ததாக குற்றம்சாட்டப்பட்டோரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஜனவரி 26 ஆம் தேதி விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. அன்றைய தினம் ஒரு விவசாயி உயிரிழந்திருந்தார். அவர் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்தான் உயிரிழந்தார் என சசிதரூர் தெரிவித்திருந்தார். இதையடுத்து சசிதரூர், மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் உள்ளிட்ட முக்கிய நபர்கள் மீது டெல்லி காவல்துறை, நொய்டா காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
எனவே அவர்கள் எந்நேரம் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர்கள் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் டெல்லி டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை குறித்து தவறாக கருத்து தெரிவித்ததாக குற்றம்சாட்டப்பட்டோரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மீண்டும் வழக்கு இரண்டுவார காலத்திற்கு பிறகு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.