நாகேஸ்வர ராவுக்கு ரூ.1 லட்சம் அபராதம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

நாகேஸ்வர ராவுக்கு ரூ.1 லட்சம் அபராதம்: உச்சநீதிமன்றம் உத்தரவு
நாகேஸ்வர ராவுக்கு ரூ.1 லட்சம் அபராதம்: உச்சநீதிமன்றம் உத்தரவு
Published on

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பீகாரின் முசாஃபர்பூர் சிறுமிகள் காப்பகத்தில் பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட் டிருந்தது. விசாரணை அதிகாரியாக சி.பி.ஐ., இணை இயக்குனர் ஏ.கே.சர்மாவையும் நீதிமன்றமே நியமித்திருந்தது. இந்நிலையில் சிபிஐ இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்ட நாகேஸ்வர ராவ், மத்திய ரிசர்வ் காவல் படைக்கு, சர்மாவை இடமாற்றம் செய்து கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஏ.கே.சர்மா வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த 7 ஆம் தேதி நாகேஸ்வர ராவுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியது. அதில் 12 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராக வேண்டும் என்றும் கூறியிருந்தது.

இதற்கு தனது பதிலை பிரமாண பத்திரமாக, நாகேஸ்வர ராவ் நேற்று தாக்கல் செய்தார். அதில், தனது தவறை உணர்ந்து கொண்டேன் என்றும் இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கிறேன் என்றும் நீதிமன்ற உத்தரவை மீற வேண்டும் என்ற உள்நோக்கமோ, விருப்பமோ இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்த வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு அவர் இன்று நேரில் ஆஜரானார். அப்போது, நீதிபதி, ‘’நீதிமன்ற அவமதிப்பு உறுதியாகி இருக்கிறது’’ என்றார். மத்திய அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே வேணுகோபால், ‘’இது மிகப்பெரிய தவறு என்பதை அவர் உணர்ந்துகொண்டார். இதனால் நீதிமன்றத்திடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுள்ளார். 32 வருட அனுபவம் உள்ள நாகேஸ்வர ராவ் மீது எந்த களங்கமும் இல்லை. அதனால், அவரது மன்னிப்பை தயவு செய்து நீதிமன்றம் கருணையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

அதை ஏற்காத நீதிபதிகள், நாகேஸ்வர ராவுக்கும் சிபிஐ-யின் சட்ட ஆலோசகருக்கும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர். மேலும் அலுவல் நேரம் முடியும் வரை நீதிமன்ற அறையின் ஏதாவது ஒரு ஓரத்தில் அமர்ந்திருக்கவும் நாகேஸ்வர ராவுக்கு உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com