தனிநபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமையே என்று ஆதார் வழக்கில், உச்சநீதிமன்ற 9 நீதிபர்கள் அமர்வு இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.
அரசின் பல்வேறு திட்டங்களின் பலன்களைப் பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டது. அந்த அட்டைக்காக கைரேகை, கருவிழியை பதிவு செய்ய எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்குகளின்போது தனிமனித தகவல் பாதுகாப்பு, அடிப்படை உரிமையா என்ற கேள்வி எழுந்தது. இந்த விவகாரத்தை முடிவு செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே. எஸ். கெஹர் தலைமையில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தனி மனித தகவல் பாதுகாப்பு தொடர்பான இந்த வழக்கின் தீர்ப்பு, ஆதார் தொடர்பான வழக்கின் போக்கை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும் என சட்ட வல்லுநர்கள் கூறியிருந்தனர்.
இந்நிலையில், தனிநபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமைதான் என்று உச்சநீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்தது. ஒன்பது நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை கூறினர்.
மத்திய அரசுக்கு எதிராக இந்த தீர்ப்பு வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பால் ஆதார் பயன்பாட்டு கொள்கையில் மாற்றம் வரலாம் என கூறப்படுகிறது.