டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனினும், தன் பதவியை ராஜினாமா செய்யாமல் சிறையில் இருந்தபடியே உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். அதேநேரத்தில், அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் மே மாதம் 7-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தாம் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை, டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (மே 3) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தற்போது தேர்தல் நடைபெறும் சூழல் என்பதால் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாகவும் அதிகாரப்பூர்வ கோப்புகளில் கெஜ்ரிவால் கையெழுத்திட வேண்டுமா என்பது குறித்தும் தங்களுக்கு விளக்கம் தேவை என தெரிவித்த அவர்கள், தொடர்ந்து இந்த வழக்கை மே 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
மே 25 ஆம் தேதி டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில், அதற்குள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்தால் ஆம் ஆத்மி கட்சிக்கு அது உத்வேகம் அளிப்பதாக இருக்கும்.