11 மாநிலங்களில் சிறைக்கைதிகளை சாதி ரீதியில் வகைப்படுத்தி அறைகளில் அடைப்பது, சாதி அடிப்படையில் பணிகளை கொடுப்பது உள்ளிட்ட விதிமுறைகள் இருந்தன. அரசமைப்பு சாசன சட்டத்திற்கு எதிரான இந்த நடைமுறையை ரத்து செய்யக் கோரி பல்வேறு பொது நல மனுக்கள் தொடரப்பட்டன.
இதை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. அத்தீர்ப்பில், “பட்டியலின கைதிகளுக்கு துப்புரவு பணி, உயர் சாதியினருக்கு சமையல் போன்ற பணிகளை வழங்குவதை அனுமதிக்கும் விதிமுறைகள் அரசமைப்பு சட்டத்திற்கே எதிரானது. இது தொடர்பான விதிகளை 3 மாதங்களுக்குள் திருத்தவும்.
பட்டியலின கைதிகளுக்கு மட்டும் குறிப்பிட்ட வேலைகளை கொடுப்பதை ஏற்க முடியாது.சில மாநிலங்களின் சிறை விதிகள் கையேட்டில் உள்ள இது தொடர்பான அம்சங்கள் செல்லாது. தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடிய குற்றவாளிகளை சாதிய ரீதியில் வகைப்படுத்தி வைத்திருந்தால் அத்தகைய பதிவுகள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டும்” என்று மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர் .
மேலும் “பாதாள சாக்கடை சுத்தம் செய்வது போன்ற பணிகளை எந்த கைதிகளையும் செய்ய வைக்க கூடாது. சிறைகளில் இனியும் சாதி அடிப்படையில் கைதிகளிடம் அணுகுமுறைகள் இருந்தால் அதற்கு மாநில அரசுகள்தான் பொறுப்பேற்க வேண்டும்” என நீதிபதிகள் கடுமையாக எச்சரித்தனர்.