'போக்சோ'-வில் சர்ச்சை தீர்ப்புகள்: புஷ்பா நிரந்தர நீதிபதியாக முடியாததன் பின்னணி!

'போக்சோ'-வில் சர்ச்சை தீர்ப்புகள்: புஷ்பா நிரந்தர நீதிபதியாக முடியாததன் பின்னணி!
'போக்சோ'-வில் சர்ச்சை தீர்ப்புகள்: புஷ்பா நிரந்தர நீதிபதியாக முடியாததன் பின்னணி!
Published on

போக்சோ (POCSO) கீழ் வரக்கூடிய வழக்குகளில் சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கிய மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கணேடிவாலாவை நிரந்தர நீதிபதியாக்கும் பரிந்துரையை உச்ச நீதிமன்ற கொலீஜியம் வாபஸ் பெற்றது.

மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் நீதிபதியாக இருப்பவர் புஷ்பா கணேடிவாலா. இவர் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். 2007 ஆம் ஆண்டில் மாவட்ட நீதிபதியாக தனது நீதித்துறை வாழ்க்கையைத் தொடங்கினார்.

இவர் அண்மையில் போக்சோ வழக்கு ஒன்றில் சர்ச்சை தீர்ப்பு வழங்கி அனைவருக்கும் அதிர்ச்சியூட்டினார். அதாவது, மகாராஷ்டிரா மாநிலத்தில் 12 வயது சிறுமியின் உடலை சீண்டி, இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தது குறித்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா, கடந்த 19 ஆம் தேதி தீர்ப்பு ஒன்றை வழங்கினார்.

அதில், குற்றம்சாட்டப்பட்ட நபர் சிறுமியின் ஆடைக்கு மேலே உடலை சீண்டினால், அது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையைத் தடுக்கும் போக்சோ சட்டத்தின்கீழ் குற்றமாகாது என தீர்ப்பளித்தார். மேலும், 'உடலுறவு கொள்வதை தவிர, தோலோடு தோல் தொடர்பு ஏற்பட்டால் மட்டுமே, பாலியல் அத்துமீறலாகும்' எனக் கூறி குற்றவாளிக்கும் தண்டனையையும் குறைத்தார். இது மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, இதுகுறித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பு மட்டும்தான் புஷ்பா கனேடிவாலாவிற்கு முதல் சர்ச்சை தீர்ப்பு அல்ல. இதற்கு முன்பும் அவர் சில சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கி வந்துள்ளார். தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிராகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் தீர்ப்புகளை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீதிபதி புஷ்பா மற்றொரு வழக்கில், சிறுமியின் கையைப் பிடித்திருப்பதும், பேன்ட் 'ஜிப்' திறந்திருப்பதும் பாலியல் அத்துமீறலாகாது என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதனிடையே, மகாராஷ்டிராவைச் சேர்ந்த இரண்டு மூத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட் மற்றும் ஏ.எம். கன்வில்கர் ஆகியோர் நீதிபதி புஷ்பாவை நிரந்தர நீதிபதியாக மாற்றுவதற்காக தங்கள் இடஒதுக்கீட்டை கொலீஜியத்திற்கு தெரிவித்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து, இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே மற்றும் நீதிபதிகள் என்.வி.ரமணா மற்றும் ரோஹிண்டன் ஃபாலி நரிமன் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட கொலீஜியம், நீதிபதி புஷ்பா கணேடிவாலாவை நிரந்தர நீதிபதியாக மாற்ற மத்திய அரசுக்கு ஜனவரி 20ஆம் தேதி பரிந்துரை செய்திருந்தது. ஆனால், இந்த சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை தொடர்ந்து, அந்த பரிந்துரையை உச்ச நீதிமன்ற கொலீஜியம் திரும்ப பெற்றுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்:

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com