மணிப்பூர் கலவரம்: "அமைதி திரும்ப எடுத்த நடவடிக்கைகள் என்ன?" மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!
மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே வெடித்திருக்கும் மோதலுக்கு இன்றுவரை தீர்வு கிடைக்கவில்லை. அதேநேரத்தில், மணிப்பூர் கலவரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஏற்கெனவே உச்ச நீதிமன்ற கோடை விடுமுறை அமர்வில் இந்த வழக்கை அவசரமாக பட்டியலிட மனுதாரர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற கோடை விடுமுறை முடிந்ததற்கு பிறகு இந்த வழக்கு விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “மணிப்பூர் மாநிலத்தில் தற்போது நிலைமை சீரடைந்து வருகிறது. அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு தற்போது 5 மணி நேரமாக குறைக்கப்பட்டு உள்ளது. பிரச்னை தணிந்து வருவதற்கான சமிஞ்சைகள் இவை” என்றார்.
மேலும் “மணிப்பூர் மாநில காவல் துறையினர், 114 கம்பெனிகள் கொண்ட துணை ராணுவப் படையினர், 114 கம்பெனிகளைக் கொண்ட ராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 153 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர்” என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். அதை ஏற்க மறுத்த மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர், “தற்போதும் மணிப்பூர் மாநிலத்தில் தீவிரமான நிலைமைதான் நீடித்து வருகிறது. ஜூன் 2ஆம் தேதி இரவுகூட மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு இன குழுக்கள் இடையிலான சண்டை மிகத் தீவிரமாக நீடித்து வருகிறது” என குறிப்பிட்டார்.
மேலும், “மெய்தி இனக்குழுவை தாக்கி வரும் குக்கி இனக்குழுவைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய நபர்களின் துல்லியமான எண்ணிக்கையை கணக்கிடவேண்டும். அவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்றும் மனுதாரர்கள் தரப்பில் கோரினர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “சட்டம் ஒழுங்கு விவகாரம், எவ்வளவு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன? நிலைமையைச் சீராக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்னென்ன? நிவாரண முகாம்கள் எந்த அளவிற்கு செயல்படுகின்றன ஆகிய தகவல்கள் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்க” என உத்தரவிட்டு விசாரணையை அடுத்த திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.