இழப்பீடு கேட்டு தாமதமாக முறையீடு செய்ததை காரணம்காட்டி காப்பீட்டாளருக்கு பணம் தர மறுப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஹரியானா மாநிலம் ஹிஸாரில் காப்பீடு செய்யப்பட்டிருந்த லாரி திருடு போனதை தொடர்ந்து காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி அதன் உரிமையாளர் விண்ணப்பம் செய்தார். ஆனால் ஒரு நாள் தாமதமாக அந்த விண்ணப்பத்தை தாக்கல் செய்ததால், காப்பீட்டு தொகையை வழங்க முடியாது என அந்நிறுவனம் கைவிரித்தது. தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்திலும் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்துக்கு ஆதரவாக தீர்ப்பளிக்கப்பட்டது.
இதை எதிர்த்து அந்த வாடிக்கையாளர் தொடர்ந்த வழக்கு நீதிபதி ஆர்.கே.அகர்வால் மற்றும் நீதிபதி அப்துல் நசீர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது முறையீடு செய்வதில் ஏற்பட்ட தாமதத்தை மட்டுமே காரணம் காட்டி காப்பீட்டு தொகையை வழங்க முடியாது என மறுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். இத்தகைய வழக்குகளில் உடைமைகளை பறிகொடுத்த நபரின் நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டே காப்பீட்டு நிறுவனங்கள் முடிவு எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.