காவிரி தொடர்பான வழக்குகள் தீர்ப்பாயத்திற்கு திருப்பி அனுப்பப்பட மாட்டாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. விசாரணையை முழுமையாக நடத்தி உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
காவிரி நீர்ப்பங்கீடு தொடர்பாக தமிழக அரசும் பிற மாநிலங்களும் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. கடந்த டிசம்பர் மாதம் இந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது, காவிரி வழக்கில் தீர்ப்பாயத்தின் உத்தரவே இறுதியானதாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றமே தொடர்ந்து விசாரிக்கும் என தெரிவித்தனர்.
மேலும், ஜூலை மாதம் காவிரி நீர்ப்பங்கீடு தொடர்பான வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை நடைபெறும் எனவும் நீதிபதிகள் கூறியிருந்தனர். அதன்படி இந்த வழக்கு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், காவிரி தொடர்பான வழக்கு தீர்ப்பாயத்திற்கு திருப்பி அனுப்பப்பட மாட்டாது என தெரிவித்தனர். இதுதொடர்பான அனைத்து விசாரணைகளையும் முழுமையாக நடத்தி, உச்சநீதிமன்றமே இறுதித் தீர்ப்பை வழங்கும் எனவும் நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.