அதி தீவிர புயலாக மாறியுள்ள Amphan நாளை மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே கரையைக் கடக்க இருக்கும் சூழ்நிலையில் அம்மாநில கடலோரப் பகுதியில் வசிக்கும் சுமார் 3 லட்சம் பேர் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதி தீவர புயலாக மாறியுள்ள Amphan எதிர்கொள்வது குறித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உயர்மட்டக் குழு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்பு பேசிய அவர் "மேற்கு வங்க மக்கள் நாளை காலை 11 மணி வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம். இதன் காரணமாகக் கடலோர மாவட்டங்களில் வசிக்கும் 3 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக முகாமில் இருப்பவர்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும்" என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையில் " அதி தீவிர புயலாக மாறியுள்ள Amphan புயல், கொல்கத்தாவிற்கு சுமார் 700 கிமீ தொலைவில் மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் தற்போது நிலை கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 16 கிமீ வேகத்தில் வடகிழக்கு திசை நோக்கி நகர்கிறது. இது மேலும் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வலுவிழந்து நாளை வங்கதேசத்தில் கரையைக் கடக்கும்." எனக் கூறியுள்ளது.
மேலும் " மேற்கு மத்திய மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்று மணிக்கு 150-160 கிமீ வேகத்தில் வீச வாய்ப்புண்டு. கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். தெற்கு வங்கக் கடல், குமரிக்கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம்” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது