மண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகை சுமலதா, பாஜகவில் இணைய இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலம் மண்டியா தொகுதியில் மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவி சுமலதா, காங்கிரஸ் கட்சியில் சார்பில் போட்டியிட வாய்ப்புக் கேட்டார். அந்த தொகுதியில் அம்ப்ரீஷ் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
ஆனால், அந்த தொகுதி கூட்டணி கட்சியான மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு கொடுக்கப்பட்டு விட்டது என்று காங்கிரஸ் கைவிரித்தது. அந்த தொகுதியில் முதலமைச்சர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி நிறுத்தப்பட்டார். இதனால் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்த சுமலதாவுக்கு பாஜக ஆதரவு கொடுத்தது. அவருக்கு ஆதரவாக கன்னட திரையுலகைச் சேர்ந்தவர்களும் களமிறங்கினர். இந்நிலையில் அவர் வெற்றி பெற்றார். இதன் மூலம், கர்நாடகா மாநிலத்தில் வெற்றி பெற்ற முதல் பெண் சுயேட்சை வேட்பாளர் என்ற பெயரையும் அவர் தட்டிச் சென்றார்.
இதையடுத்து சுமலதா, பெங்களூரு கன்டீரவா ஸ்டுடியோவில் உள்ள தனது கணவரின் சமாதிக்கு நேற்று சென்ற அவர், மரியாதை செலுத்தினார். அப்போது கண்ணீர் விட்டார்.
பின் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “அம்பரீஷ் பிறந்த நாளன்று அதாவது நாளை, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தை மண்டியாவில் நடத்த இருக்கிறேன். நான் பாஜகவில் சேர்வது பற்றி கேட்கிறார்கள். மண்டியா மக்களிடம் ஆலோசனை கேட்டுதான் தேர்தலில் நின்றேன். இதையும் அவர்களிடம் ஆலோசனை கேட்ட பின்பே முடிவு செய்வேன்” என்றார்.
முன்னதாக, கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா கூறும்போது, “சுமலதாவுக்கு ஆதரவு தெரிவித்தோம். அவர் வெற்றி பெற்றுள்ளார். எங்கள் கட்சிக்கு வருமாறு அவரை அழைக்கமாட்டோம். அவர் வந்தால் வரவேற்போம்” என்றார். இதையடுத்து, சுமலதா, நாளை நடக்கும் கூட்டத்தில் பாஜகவில் சேருவார் என்று கூறப்படுகிறது.