மேற்கு வங்க மாநிலத்தில் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திலுள்ள மதுராபூரில் நடந்த பேரணியில் பேசிய மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜூம்தார், “உங்கள் குழந்தைகள் பள்ளியில் இருந்து திரும்பி வந்தபின், அவர்களால் பாடம் குறித்த எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல முடியாது. அதற்காக நீங்கள் அவர்களை அறைந்து ‘பள்ளிகளில் என்ன படித்தீர்கள்?’ என கேள்வி கேட்கின்றீர்கள். உங்கள் குழந்தைகளை அறைவதைவிட, மம்தா பானர்ஜியை அறையுங்கள், ஏனெனில் அவர் கல்வி முறையை அழித்துவிட்டார்” என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுதொடர்பாக பேசிய திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மஹூவா மொய்த்ரா, “மேற்கு வங்கத்தின் பாஜக தலைவரும், எம்பியுமானவர் சுகந்தா மஜூம்தார். அவர் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு எதிராக உடல்ரீதியான வன்முறையை பயன்படுத்த வேண்டும் என பகிரங்கமாக ஒரு உரையை நிகழ்த்தி இருக்கிறார். இது முற்றிலும் வெட்கக்கேடானது.
பெண்களை மதிக்காத கட்சி அது. பிரதமர் மோடி பெண் சக்தியைப் பற்றி தொடர்ச்சியாக பேசி வருகிறார். பிரதமரே, உங்களது மேற்குவங்க மாநிலத் தலைவர் முதலமைச்சரை அறையுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இம்மாதிரியான மோசமான ஒன்றை நாங்கள் கேள்விப்பட்டதில்லை. உங்கள் கட்சியில் உள்ள அனைவரும் இந்த கருத்தை கண்டிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
மஜூம்தாரின் கருத்தை மேற்குவங்க அமைச்சர் ஷாஷி பஞ்சாவும் விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், “மேற்கு வங்கத்தின் பாஜக மாநிலத் தலைவர் சுகந்தா மஜூம்தார் மீண்டும் விஷமத்தனமாக பேசுகிறார். இழிவான, எரிச்சலூட்டும் வார்த்தைகளை பேசியதோடு அல்லாமல் முதல்வர் மம்தா பானர்ஜியை அறைய பொதுமக்களை தூண்டி வருகிறார். பெண்கள் மீது வெறுப்பு மற்றும் பெண்களை அவமரியாதை செய்யும் கட்சி பாஜக” என தெரிவித்துள்ளார்.