சுஜித்தின் மறைவுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்திய மக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIPSujith, #SujithWilson, #SorrySujith ஆகிய ஹேஸ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளன
திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணி 80 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. ஆனால் மீட்பு பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்துவிட்டன. குழந்தை இருந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து மருத்துவர்கள் சோதனை செய்தனர். பின்னர் சுஜித்தின் உடல் அதிக அளவில் சிதைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த சுஜித்தின் உடலை மீட்டு வெளியே எடுத்தனர். பின்னர், அந்த உடல் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சுஜித்தின் உடலுக்கு மருத்துவமனையில் உடனடியாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் சுஜித்தின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, சடங்குகள் செய்யப்பட்டன. சுஜித்தின் மறைவுக்கு அப்பகுதி மக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகமே கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறது.
இந்நிலையில் சுஜித்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ட்விட்டரில் #RIPSujith, #SujithWilson, #SorrySujith, #ripsurjeeth ஆகிய ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் உள்ளன. தமிழகம் மட்டுமின்றி இந்திய மக்கள் பலரும் சுஜித்துக்காக இணையத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.