ஜான்சியில் உள்ள ஒரு தனியார் பல்கழைக்கழகத்தின் உதவிப்பேராசிரியராக பணியாற்றி வந்தவர் ரஞ்சித் சிங் யாதவ். இவர் கடந்த வாரம் டெல்லியில் இருந்து தஷின் எக்ஸ்பிரஸ் ரயிலின் மூலம் ஜான்ஸிக்கு பயணம் செய்துள்ளார். ரயில் குவாலியர் நோக்கி சென்றுக்கொண்டிருந்த சமயம் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
அப்போது அவர் பயணம் செய்த அதே பெட்டியில் அவருடைய சில மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். இவர்கள் பேராசிரியரின் நிலையை தெரிந்துக்கொண்டு அவருக்கு உதவ நினைத்து, அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.
இந்நிலையில் குவாலியர் ஸ்டேஷனுக்கு வெளியே ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருப்பதாக மாணவர்களுக்கு தகவல் வந்துள்ளது. உடனடியாக மாணவர்கள் பேராசிரியரை கூட்டிக்கொண்டு ஸ்டேஷனுக்கு வெளியே வந்துள்ளனர். ஆனால் அச்சமயம் அங்கு ஆம்புலன்ஸ் ஏதும் இல்லாததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் அப்போது அங்கு ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்ததை கவனித்துள்ளனர்.
அந்த காரானது ஒரு நீதிபதிக்கு சொந்தமானது. இதைப்பற்றி அறியாத மாணவர்கள் பேராசிரியரை காப்பாற்றும் பொருட்டு காரில் இருந்த கார் ஓட்டுனரையும், பாதுகாப்பு பணியாளர்களையும் வலுக்கட்டாயமாக காரைவிட்டு வெளியேற்றி பேராசிரியருடன் அங்கிருக்கும் ஜெய் ஆரோக்யா மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் பேராசிரியருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பேராசிரியர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நீதிபதியின் கார் ஓட்டுனர், தன்னையும் பாதுகாப்பு பணியாளர்களையும் சிலர் வலுக்கட்டாயமாக வெளியேற்றி காரை கடத்திச்சென்றதாக மாணவர்கள் மீது காவல்துறையில் புகாரளித்தார். இவரின் புகாரை ஏற்ற காவலர்கள் மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, மாணவர்களையும் அவர்கள் ஓட்டிச்சென்ற காரையும் தேடி வந்தனர். போலீசாரின் பலத்த தேடுதலுக்குப்பிறகு அந்தக் கார் ஜெய் ஆரோக்யா மருத்துவமனை வளாகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. காரை மீட்ட போலீசார் அங்கு சென்று சோதனை செய்துள்ளனர்.
காவல்துறையினர் வருவதற்குள், மாணவர்கள் பேராசிரியரின் குடும்பத்தினருக்கு தகவல் கூறிவிட்டு கிளம்பிவிட்டதாக தெரிகிறது. பேராசிரியர் உயிரை காப்பாற்றவே அவர்கள் இப்படி செய்தனர் என்றபோதும், அத்துமீறி காரை எடுத்துச்சென்றது தவறு என்பதால் மாணவர்கள் யார் என காவல்துறை தேடிவருகிறது.