டெல்லி கலவரம் தொடர்பான வழக்கில் ஜேஎம்யு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித்திற்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன் முடிவடைந்ததை அடுத்து அவர் மீண்டும் டெல்லி சிறைக்கு திரும்பினார்.
கடந்த 2020ஆம் ஆண்டு டெல்லியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக பல்கலைக்கழகம் மாணவரான உமர் காலித் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பல்வேறு முறை ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுக்கள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் அவரது சகோதரியின் திருமணத்தை மேற்கோள் காட்டி டெல்லி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி இடைக்கால ஜாமின் வழங்கியது.
அதன்படி அவரது சகோதரியின் திருமணம் நடைபெறும் டிசம்பர் 23ஆம் தேதி முதல் டிசம்பர் 30ஆம் தேதி வரை அவர் ஜாமினில் வெளிவரலாம் என்றும் ஊடகங்களை சந்திக்கக் கூடாது சாட்சிகளை கலைக்க முற்படக்கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்படுவதாகவும் ஜாமீன் கால அவகாசம் நிறைவடைந்த பிறகு அவர் மீண்டும் சரண் அடைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் அவர் சரணடைந்த நிலையில் மீண்டும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.