மும்பை ஐ.ஐ.டி. விடுதியின் 7வது மாடியில் இருந்து குதித்து முதலாமாண்டு பி.டெக் மாணவன் தற்கொலை செய்துக்கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பையும், சர்ச்சைக்கும் வித்திட்டிருக்கிறது.
குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்தவர் தர்ஷன் சொலான்கி (18). பி.டெக் இயந்திரவியல் படிப்புக்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் பொவாய் நகரத்தில் அமைந்துள்ள மும்பை ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்தில் சேர்ந்திருக்கிறார். தற்போது முதலாமாண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில்தான் ஞாயிற்றுக்கிழமையான நேற்று (பிப்.,12) ஐ.ஐ.டி விடுதியின் 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்திருக்கிறார் சொலான்கி. கடந்த பிப்ரவரி 11ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வு முடிந்திருக்கும் நிலையில் தர்ஷன் சொலான்கியின் தற்கொலை நிகழ்ந்திருக்கிறது.
மாடியில் இருந்து தர்ஷன் குதித்ததை அடுத்து விடுதி பாதுகாவலர்கள் கொடுத்த தகவலின் பேரில் பொவாய் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள். தர்ஷனின் விடுதி அறையை ஆராய்ந்ததில் தற்கொலை கடிதங்கள் எதுவும் இல்லை எனக் கூறிய போலீசார் இந்த தற்கொலையை எதிர்பாராத மரணம் (accidental death) என வழக்குப்பதிந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், தர்ஷனின் மரணத்துக்கு பின்னணியில் படிப்பு காரணமாக கொடுக்கப்பட்ட அழுத்தமாக இருக்குமா என்ற கோணத்திலும் விசாரித்து வருவதாக பொவாய் போலீசார் கூறியிருக்கிறார்கள். இதனிடையே, ஐ.ஐ.டி. பாம்பேவுக்கான APPSC (Ambedkar Periyar Phule Study Circle) என்ற அம்பேத்கரிய மையம் தர்ஷன் சொலான்கியின் தற்கொலை குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறது.
அதில், “பி.டெக் படிப்புக்காக வெறும் 3 மாதங்களுக்கு முன்பே ஐ.ஐ.டி. பாம்பேவில் சேர்ந்த பட்டியலின மாணவனான தர்ஷன் சொலான்கியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறோம். தர்ஷனின் மரணம் ஏதோ தனிப்பட்ட இறப்பாக எங்கலால் கருதமுடியவில்லை. மாறாக இது மும்பை ஐ.ஐ.டியின் நிறுவன கொலையாக நினைக்கிறோம்” என பதிவிடப்பட்டிருக்கிறது.
மேலும், “தர்ஷனின் மரணம் நிறுவனத்தால் நடத்தப்பட்ட கொலை என புகார் தெரிவித்தும் மும்பை ஐ.ஐ.டி. நிர்வாகம் எந்த விசாரணையோ அல்லது நடவடிக்கையோ எடுக்கவில்லை. இடஒதுக்கீட்டுக்கு எதிரான பேச்சுகளால் முதலாமாண்டு மாணவர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருகிறார்கள்.” என்றும் சாடியிருக்கிறார்கள்.