இணைய வசதிக்காக திறந்தவெளியில் ஆன்லைன் வகுப்பு: சிறுத்தையால் தாக்கப்பட்ட கல்லூரி மாணவர்

இணைய வசதிக்காக திறந்தவெளியில் ஆன்லைன் வகுப்பு: சிறுத்தையால் தாக்கப்பட்ட கல்லூரி மாணவர்
இணைய வசதிக்காக திறந்தவெளியில் ஆன்லைன் வகுப்பு:  சிறுத்தையால் தாக்கப்பட்ட கல்லூரி மாணவர்
Published on

கார்ட்டூன் நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா 

குஜராத் மாநிலம், தாப்பி மாவட்டத்தின் வனப்பகுதியில் உள்ள கிராமத்தில் திறந்தவெளியில் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொண்ட கல்லூரி மாணவர் ஒருவர் சிறுத்தையால் தாக்கப்பட்ட சம்பவம், அந்தப் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்குள்ள கப்பாட்டியா கிராமத்தில் உள்ள ஒரு மலைக்குன்றில்தான் ஆன்லைன் வகுப்புகள் நடக்கும். இணையவசதிக்காக மாணவர்கள் அந்த இடத்தை தேர்ந்தெடுத்து உள்ளனர். சங்காத் தாலூகாவில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பிகாம் படிக்கும் மாணவர் கோவிந்த், தன் நண்பருடன் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொண்டார். வகுப்பில் அவர்கள் இருந்தபோது ஒரு சிறுத்தை திடீரென தென்பட்டது. அதனிடமிருந்து தற்காத்துக்கொள்வதற்குள் அந்த மாணவர் சிறுத்தையால் தாக்கப்பட்டார்.

அவரது இடது கை மற்றும் கால்களையும் கவ்விப்பிடித்து சிறுத்தை கடுமையாக தாக்கியது. அதைக்கண்டு அதிர்ந்துபோன நண்பன், கிராமத்தினரை அழைக்க பதறிக்கொண்டு ஓடினான். பின்னர் மாணவர் கோவிந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிராமத்தினரின் சத்தம் கேட்டு சிறுத்தை அங்கிருந்து புதருக்குள் மறைந்தது.

கோப்புப் படம் 

"என் இடதுகையில் ஏழு தையல்கள் போடப்பட்டுள்ளன. நானும் நண்பனும் முதலில் சிறுத்தையைப் பார்த்ததும் அதிர்ந்துவிட்டோம். உடனே அவனிடம் சொல்லி கிராமத்தினரை அழைத்துவரச் சொன்னேன். நான் சிறுத்தையை எதிர்கொண்டு நின்றேன். கொஞ்சம் திரும்பியிருந்தால் என்மீது பாய்ந்து என்னைக் கொன்றிருக்கும். இடதுகையைப் பிடித்தபோது, அதிலிருந்து விடுபட போராடினேன். எனக்கு ரத்தம் அதிகமாக வெளியேறியது. சரியான நேரத்தில் கிராமத்தினர் வந்ததால், நான் காப்பாற்றப்பட்டேன் " என்று பதற்றம் விலகாமல் பேசுகிறார் மாணவர் கோவிந்த்.

சங்காத் தாலுக்காவைச் சேர்ந்த வனத்துறை அதிகாரி மார்ட்டினா காமிட், " சிறுத்தையைப் பிடிக்க இரண்டு கூண்டுகள் அமைத்திருக்கிறோம். இங்கு சிறுத்தைகள் வருவது சகஜம். இந்த கிராமத்தைச் சுற்றி அடரந்த காடுகள் உள்ளன. அவை சிறுத்தைகளுக்கு பாதுகாப்பான இடமாக இருக்கிறது" என்கிறார்.

கிராமத்தில் இணையவசதி குறைவாக இருப்பதால்தான் இந்த நிலை ஏற்பட்டதாகக் கூறும் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர், சிறுத்தையிடமிருந்து மக்களைப் பாதுகாக்க 12 இளைஞர்கள் கொண்ட தனிக் குழுவை அமைத்திருப்பதாகத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com