கௌசிக் கரண் என்ற மாணவர் பெங்களூரு விமான நிலையத்தில் காவல்துறையினரால் முறையாகக் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
மேற்கு வங்க மாநிலம் பங்குரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கரண். 22 வயதான பொறியியல் மாணவரான இவர், கடந்த ஏப்ரல் 29ம் தேதி அன்று கொல்கத்தாவிலிருந்து பெங்களூர் செல்லும் இண்டிகோ விமானம் 6E-6314 ல் பயணித்துள்ளார்.
முன்னதாக இவருக்கு விமானத்தில் 18E இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அது வசதியாக இல்லாததால் கரண் தனது இருக்கையை மாற்றி தரும்படி கோரியுள்ளார். கரணின் கோரிக்கையை ஏற்ற விமான ஊழியர்களும் அவருக்கு இ எண் 18F என்ற இருக்கையை ஒதுக்கிக் கொடுத்துள்ளனர். இந்த இருக்கையானது எமர்ஜென்ஸி கதவிற்கு அருகில் இருந்துள்ளது.
இந்நிலையில், பெங்களூர் விமான நிலையத்தை அடைந்த விமானமானது தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கரண் தனக்கு அருகில் இருந்த அவசர கதவினை திறக்க முயன்றுள்ளார். இதனை பார்த்ததும் அருகில் இருந்த சக பயணி அதிர்ச்சி அடைந்து பணிப்பெண்ணிடம் புகார் அளித்துள்ளார்.
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) அதிகாரி ஒருவரும், கேபின் குழுவினரும் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு விமானத்தின் பாதுகாப்பை உறுதி செய்தனர்.
இருப்பினும் கரணின் இச்செய்கையால் அதிர்சியடைந்த இண்டிகோ பாதுகாப்பு அதிகாரிகள், பெங்களூரு சிஐஎஸ்எஃப் அதிகாரிகளிடம் கரணை ஒப்படைத்தனர். இது குறித்து இண்டிகோ ஊழியர் முகமது உமர் KIA போலீசில் முறையான புகாரும் அளித்துள்ளார்.
கரணின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக மூன்று மாத சிறைதண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, முதல் முறை விமானத்தில் பயணம் செய்த கவுசிக் கரண், “அவசர கதவு அருகே இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தேன். இருக்கையில் இருந்து எழுந்து நிற்க, அவசர கதவின் கைப்பிடியை பிடித்தேன்” என்று விளக்கம் அளித்தார். அவருக்கு ஜாமீன் வழங்கி போலீசார் விடுவித்தனர்.