அரபிக்கடலில் உருவான வாயுப் புயல், இப்போது அதிதீவிர புயலாக மாறியுள்ளதாகவும், குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தர் மற்றும் மஹூவா இடையேயான பகுதியில் நாளை காலை கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
தற்போது அந்தப் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து குஜராத் மாநிலத்தின் கடற்கரை பகுதியான போர்ப்பந்தர் மற்றும் டையு இடையே அதிதீவிரபுயலாக நிலைகொண்டுள்ளது. அந்த வாயுப்புயலின் வேகமானது மணிக்கு 145 முதல் 155கி.மீ வரை இருக்கும் என்றும், நாளை 145 முதல் 170கி.மீ வரை புயல் காற்றின் வேகத்துடன் கரையைக் கடக்கும் என்றும் தெரிவித்துள்ளது, வானிலை ஆய்வு மையம்.
இதன் காரணமாக, மகாராஷ்டிரா அரசு இன்றும் நாளையும் கடற்கரைப் பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்றும், அப்பகுதி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாது பொதுமக்கள் பாதுகாப்பு கருதி மீட்புப் படையினரும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 1,64,090 கரையோர மக்களை பாதுகாப்பான பகுதிக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த வாயுப்புயல் நாளை கரையைக் கடக்கவுள்ள நிலையில், பலத்த சூறைக்காற்றுடன் கூடிய புழுதிப்புயல் கிர் சோம்நாத் மாவட்டத்திலுள்ள சோமநாதர் கோயில் பகுதியை தாக்கியுள்ள காட்சி இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதில் கோயில் முழுவதும் மணற்புழுதியால் மறைக்கப்பட்டுவிட்டது. அந்த அளவிற்கு அந்தச் சூறைக்காற்று இருந்தது.