பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை அதிகரிப்புக்கு செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மக்களவையில் எதிர்க்கட்சிகள் உடனடியாக எரிபொருள் விலை உயர்வு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வெளிநடப்பு செய்தனர். பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சமர்ப்பித்திருந்தார் ஒத்திவைப்பு தீர்மான கோரிக்கைகளை சபாநாயகர் ஓம் பிர்லா நிராகரித்த நிலையில் மக்களவையில் வெளிநடப்பு நடைபெற்றது. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் இந்த வெளி நடப்பில் பங்கேற்றனர்.
மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானத்தை வலியுறுத்தி உடனடியாக பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை ஆகியவற்றின் விலை உயர்வு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அவைத் தலைவர் வெங்கையா நாயுடு எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்ததால், பல்வேறு எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் தொடர் முழக்கம் எழுப்பினர்.
அவைத்தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பிய எதிர்க்கட்சிகள் இந்த விலை உயர்வு குறித்து பின்னர் விவாதிக்கலாம் என்ற வெங்கையா நாயுடுவின் ஆலோசனையை ஏற்காத நிலையில், மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை 12 மணிக்கு கூடிய போதும் எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கத்தில் ஈடுபட்டதால், அவை இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. சமையல் எரிவாயு உருளையின் விலை ஆயிரம் ரூபாயை தொடும் நிலையில் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். டீசல் விலை உயர்வு பணவீக்கத்தை மேலும் அதிகப்படுத்தி விலைவாசி உயர்வை அதிகரிக்கும் எனவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இப்படி இரண்டு அவைகளிலும் எரிபொருள் விலை உயர்வு கடும் கண்டனத்தை சந்தித்துள்ள நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த விலை உயர்வு தொடர் எதிர்ப்பை சந்திக்கும் என வலியுறுத்தியுள்ளனர். சட்டசபை தேர்தல்கள் நடைபெற்ற சமயத்தில் விலையை அதிகரிக்காமல் இருந்த அரசு, தற்போது தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில் விலை உயர்வை அமல்படுத்தி உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற்ற நிலையில், 137 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்தது. நான்கு மாநிலங்களில் வெற்றிபெற்ற பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்த பொது மக்களுக்கு கிடைத்துள்ள பரிசாக இந்த விலை உயர்வை கருதுவதாக பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-கணபதி சுப்ரமணியம்