ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் விவகாரத்தில் இந்தியாவை வில்லானாக சித்தரிப்பதை நிறுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜ்ஜு கூறியுள்ளார்.
மியான்மர் நாட்டில் வசித்துவரும் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் மீது அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் காரணமாக அவர்கள் அண்டை நாடுகளான இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு அகதிகளாக செல்கின்றனர். கடந்த மாதம் 25-ம் தேதியில் இருந்து கடந்த இரண்டு வார காலத்தில் சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லீம்கள் வங்கதேசத்திற்குள் நுழைந்துள்ளதாக என ஐ.நா.சபை அறிவித்தது.
இந்தியாவுக்குள் அகதிகளாக நுழையும் ரோஹிங்கியா இஸ்லாமியர்களுக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், “ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் 40 ஆயிரம் பேர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து தங்கியுள்ளனர். அவர்கள் நிச்சயம் வெளியேற்றப்படுவார்கள்” என்று கிரன் ரிஜ்ஜு கூறிவிட்டார். இந்திய அரசின் இந்த முடிவுக்கு ஐ.நா. சபை மனித உரிமை ஆணையம் கண்டனம் தெரிவித்தது. மேலும், சர்வதேச அளவிலான அகதிகள் சட்டதிட்டத்தை மதித்து நடவடிக்கைகள் அமையவேண்டும் என்று கேட்டுக் கொண்டனது.
ஐ.நா. மனித உரிமை ஆணையம் கருத்து தெரிவித்து இரண்டு நாட்கள் ஆன நிலையில், இந்தியாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுகிறது என்று கிரன் ரிஜ்ஜு இன்று கூறியுள்ளார்.