நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் வேகம்பிடித்து வருகின்றன. அந்த வகையில் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மக்களவைத் தொகுதியான மால்டா வடக்குத் தொகுதியில் பாஜக சார்பில் சிட்டிங் எம்பியான காகன் முர்முவுக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டு உள்ளது. இதற்காக தீவிர பரப்புரையில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இந்தச் சூழலில் கிராமம் ஒன்றில் அவர் வாக்கு சேகரித்தபோது மாணவி ஒருவருக்கு முத்தம் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்த புகைப்படத்தை மாநில எதிர்க்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தங்கள் எக்ஸ் தளத்தில் பகிர்ந்ததுடன் கடுமையான கண்டனத்தையும் தெரிவித்திருந்தது. குறிப்பாக, “ 'மோடியின் குடும்பம்' என்று கூறிக்கொண்டு உங்கள் வீட்டுக்கு வாக்கு கேட்டு வரும் நபர்கள், செய்யும் வேலை இதுதான்” என அது திரிணாமுல் காங்கிரஸ் விமர்சனம் செய்திருந்தது.
இதற்குப் பதிலளித்திருந்த எம்பி காகன் முர்மு, “எல்லோரும் குழந்தைகளை நேசிக்கிறார்கள். அவர் எனக்கு குழந்தையை போன்றவர். மேலும், அந்தப் பெண் எனக்கு அறிமுகமானவர். அந்தச் சமயத்தில் சிறுமியுடன் அவரது பெற்றோரும் உடன் இருந்தனர். அந்த படத்தை ஃபேஸ்புக்கில் வைரலாக்கி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உண்மையில் பெண் இனத்தை அவமரியாதை செய்துள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.
அதேநேரத்தில், அந்த மாணவியின் புகைப்படம் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அவர் மிகவும் வருத்தமும் அவமானமும் அடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்திருந்தன. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அவர், தேர்தல் ஆணையத்தை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக அந்த மாணவி உள்ளூர் ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் அவர், “என்னுடைய தந்தை வயதுடைய நபர் ஒருவர், என்னிடம் அவருடைய அன்பைக் காட்டினார். எனது கன்னத்தில் முத்தம் கொடுத்தார். இதில் என்ன பிரச்னை இருக்கிறது? மக்கள் ஏன் இதுபோன்ற அசிங்கமான மனநிலையுடன் இருக்கிறார்களோ? அவர் நடந்துகொண்டதில் ஒன்றும் தவறு இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.