மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்து வருவதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்த நாடு தழுவிய "சமாஜிக் நய் பக்வாடா" (சமூக நீதிக்கான பதினைந்து நாட்கள்) கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பல்வேறு அரசாங்க திட்டங்களைப் பற்றி ஆய்வு செய்வதற்காக, சத்தீஸ்கரில் மஹாசமுண்டிற்கு ஒரு நாள் பயணமாக சென்றார் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி. அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பெட்ரோல் விலையை குறைக்க மாநிலங்கள் வாட் வரியை குறைக்க வேண்டும் என்று கூறினார்.
அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி “பெட்ரோல் விலையை கட்டுக்குள் வைத்திருப்பதே எங்களின் முயற்சி. எனவே கடந்த ஆண்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. மாநில அரசுகளையும் அதைச் செய்யச் சொன்னது. சத்தீஸ்கரில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி 24 சதவீதமாக உள்ளது, அதை 10 சதவீதமாகக் குறைத்தால், பெட்ரோல் விலை தானாகவே குறையும். நுகர்வு அதிகரிக்கும் போது, 10 சதவீதம் (வாட்) கூட அதிகமாக உள்ளது," என்று அவர் கூறினார்.