"வீட்டிற்கே சென்று மது விநியோகம் செய்வது பற்றி யோசிக்கலாமே" - உச்சநீதிமன்றம் ஆலோசனை

"வீட்டிற்கே சென்று மது விநியோகம் செய்வது பற்றி யோசிக்கலாமே" - உச்சநீதிமன்றம் ஆலோசனை
"வீட்டிற்கே சென்று மது விநியோகம் செய்வது பற்றி யோசிக்கலாமே"  - உச்சநீதிமன்றம்  ஆலோசனை
Published on

மதுவை வீட்டுக்கே சென்று விநியோகம் செய்யும் நடைமுறை குறித்து மாநில அரசுகள் யோசிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு மே 17 ஆம் தேதி வரை அமலில் இருக்கிறது. இதனால் மார்ச் 25 ஆம் தேதி முதல் நாட்டில் மதுபானக் கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை சில மாநிலங்களில் மதுபானக் கடைகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. தமிழகத்தில் மே 7 ஆம் தேதி சென்னையைத் தவிரப் பிற மாவட்டங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.

மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதால் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்கக் கடைப்பிடிக்க வேண்டிய தனி மனித விலகலை முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மனு குறித்து இன்று 3 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு விசாரணை செய்தது. நீதிபதிகள் அஷோக் பூஷன், சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் பிஆர் கவாய் ஆகிய நீதிபதிகள் காணொளிக் காட்சி மூலம் வழக்கை விசாரித்தனர்.

அப்போது அவர்கள் " இந்த மனு குறித்து எங்களால் எந்த உத்தரவும் போட முடியாது. ஆனால் மாநில அரசுகள் மதுபானங்களை வீட்டிற்கே சென்று விநியோகம் செய்வது அல்லது மறைமுகமாக விற்பது குறித்துப் பரிசீலிக்க வேண்டும். இதன் மூலம் சமூக விலகல் கடைப்பிடிக்கப்படும்" என்று கூறினர். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தீபக் சாய், "மிகவும் குறைந்த மதுபானக் கடைகளே திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இதனால் மதுக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. எனவே சமூக விலகலைப் பின்பற்றுவது மிகவும் சிக்கலாக மாறியுள்ளது. பொது மக்களின் வாழ்க்கை மதுபான விற்பனையால் பாதிக்கப்படக் கூடாது. இது குறித்து மாநில அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவான பரிந்துரைகளை வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதற்கு நீதிபதி எஸ்கே கவுல், "வீட்டுக்குச் சென்று மதுபானங்களை விநியோகம் செய்வது குறித்துப் பேசப்பட்டு வருகின்றது. இந்த நேரத்தில் நாங்கள் என்ன செய்ய முடியும்? எனக் கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com