சத்தீஸ்கரில் மதுக்கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வீடுகளுக்கே சென்று மதுபானங்கள் விநியோகம் செய்யும் திட்டத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
40 நாட்களுக்குப் பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் பெரும்பாலான இடங்களில் தனிமனித இடைவெளியின்றி மதுப்பிரியர்கள் கூடிய நிலையில், சத்தீஸ்கர் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு இல்லாத பச்சை மண்டல பகுதிகளில் மட்டும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால், மதுபானங்கள் வீட்டிற்கே கொண்டு கொடுக்கப்படும் என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஒரு நேரத்தில் 5 ஆயிரம் மில்லி லிட்டர் வரை ஆர்டர் செய்து கொள்ளலாம் என்றும், டெலிவரி கட்டணம் 120 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வின் ஒருபகுதியாக மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மதுக்கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் திறக்கப்பட்டதால் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச்சென்றனர். இந்நிலையில், மதுபான வகைகளுக்கு அதிகப்பட்சமாக 70 சதவிகித வரி விதித்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆயினும் விலையை பொருட்படுத்தாமல் பல்வேறு இடங்களில் மதுக்கடைகள் முன் பலரும் காலை 6 மணிமுதலே முன் வரிசையில் நின்றனர். காலை 9 மணிக்கு திறக்கும் கடைக்கு 3மணிநேரம் முன்பாக வந்து காத்திருந்த பலரும், காவல்துறையின் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 70 சதவிகித வரி தங்களுக்கு பொருட்டில்லை என்றும், அது நாட்டுக்கு அளிக்கும் நன்கொடை என்றும் இவர்கள் தெரிவித்தனர்.