கடந்த 5ஆம் தேதி, பிஷ்ணுபூரில் உள்ள குவாக்டா கோதோல் சாலையில் 9வது அசாம் ரைபிள் வீரர்கள் வந்த கேஸ்பர் புல்லட் ப்ரூஃப் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது. அப்போது மணிப்பூர் காவல்துறையினருக்கும் அசாம் ரைபிள் ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் கைகலப்பாக மாறி துப்பாக்கிச்சூடாக அரங்கேறியது. அதில் போலீஸ் கமாண்டோ வீரர் பவோனம் அப்பல்லோ காயமடைந்தார். அவரது இடது முழங்காலில் இரண்டு காயங்கள் ஏற்பட்டது.
மேலும் இரண்டு காவல் படையினருக்கும் அசாம் ரைபிள் வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூர் காவல்துறை சட்டம் ஒழுங்கு ஐஜி சக்தி சென், அசாம் ரைபிள்ஸ் தங்கள் கடமையைச் செய்வதில் தலையிடுவதாக குற்றம்சாட்டியுள்ளார். கோதோல் சாலையைத் தடுப்பு ஏற்படுத்த குக்கி போராளிகளுடன் கூட்டுச் சேர்ந்து அசாம் ரைபிள் வீரர்கள் சிலர் ஈடுபட்டதாக மணிப்பூர் காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது.
ஜூன் மாதத்தில் சுக்னு காவல் நிலையத்தில் 37 அசாம் ரைபிள்ஸ் மற்றும் மணிப்பூர் போலீஸாருக்கு இடையே இதேபோன்ற வாக்குவாதம் நடந்தது. நேற்று மற்றும் இன்று பல மாவட்டங்களில் அசாம் ரைபிள் வீரர்களை திரும்பப் பெற வேண்டும் என மெய்தி இனப் பெண்கள் பலர் போராட்டம் நடத்தியுள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய படை வீரர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வது மணிப்பூரில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
- பால வெற்றிவேல்