மாநில அரசுகள் கொரோனா பரிசோதனைகளை குறைக்க வேண்டாமென மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறையின் கூடுதல் செயலாளர் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கடந்த ஜனவரி 10-ஆம் தேதி வரை ஐசிஎம்ஆர், கொரோனா பரிசோதனைகள் நடத்துவது தொடர்பாக வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
நிறைய மாநிலங்கள் இந்த பரிசோதனைகளை குறைத்திருப்பது புள்ளிவிபரங்கள் மூலமாக தெரிய வந்திருக்கிறது. ஆரம்ப கட்டத்திலேயே கொரோனா பரவலை தடுக்கவும் உயிரிழப்புகளை குறைக்கவும் பரிசோதனை செய்வது என்பது மிகவும் அவசியமானதாக வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா அறிகுறிகள் இருக்கக் கூடிய நபர்களுக்கு மற்றும் கொரோனா உறுதியான நபர்களுடன் தொடர்பில் இருந்த தொற்று பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ள நபர்களுக்கும் கட்டாயம் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்பதை மீண்டும் நினைவூட்டி கடிதம் எழுதப்பட்டுள்ளது.