மின்னல் வேக வீரர் உசைன் போல்டைவிட அதிவேகமாக ஓடியவர் எனக் கூறப்பட்ட ஸ்ரீனிவாசகவுடா, சில கம்பாளா போட்டிகளுக்கு பிறகே விளையாட்டுத் துறை ஆணையத்தின் சோதனையில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுபோல கர்நாடகாவில் எருது விடும் விழா நடைபெறுவது வழக்கம். கம்பாளா என்ற அந்த ஓட்டப் பந்தயத்தில் கிட்டத்தட்ட 143 மீட்டர் தூரத்தை தனது எருதுகளுடன் ஒரு வீரர் கடக்க வேண்டும். ஓடக்கூடிய ஓடுதளம் சாதாரணமாக இருக்காது. தண்ணீர் ஊற்றப்பட்டு சேறும் சகதியுமாக இருக்கும். தங்கள் மாடுகளை முன்னே ஓடவிட்டவாறு கயிற்றை பிடித்துக்கொண்டு வீரரும் பின்னே ஓட வேண்டும். இந்த போட்டியில் கலந்துகொண்ட வீரரான ஸ்ரீனிவாசகவுடா, 142.5 மீட்டரை வெறும் 13.62 நொடிகளில் ஓடிக்கடந்து வெற்றி பெற்றார்.
கம்பாளா விழாவில் சாதனை படைத்த ஸ்ரீனிவாசகவுடாவின் வேகத்தை சிலர் உசைன் போல்டின் சாதனையோடு ஒப்பிட்டு பார்த்தனர். அப்படியானால் ஸ்ரீனிவாசகவுடா 100 மீட்டரை 9.55 நொடிகளில் கடந்திருக்கிறார் எனக் கணக்கிட்டவர்கள், இது உசைன் போல்டின் சாதனையை முறியடித்த கணக்குதான் என்று தெரிவித்தனர். இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவியது. அதோடு மட்டுமில்லாமல் இது போன்ற வீரர்களை அரசு கவனத்தில் எடுத்து சரியான பயிற்சி வழங்கினால் ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் இந்தியா பதக்கங்களை குவிக்கும் என்றும் பலர் கருத்து தெரிவித்தனர்.
இதனிடையே, ஸ்ரீனிவாசகவுடாக்கு முறையான பயிற்சி அளித்து ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்படும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்னும் சில கம்பாளா போட்டிகள் இருப்பதாகவும், அதனை முடித்துவிட்டு மார்ச் மாதம் சாய் எனப்படும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் ஓட்டப்பந்தய சோதனையில் பங்கேற்க இருப்பதாகவும் ஸ்ரீனிவாசகவுடா தெரிவித்துள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சர், ஸ்ரீனிவாசகவுடா சாய் சோதனையில் வெற்றி பெற்றால் அவருக்கு அடுத்தக்கட்ட பயிற்சிகள் தொடங்கும் என்றும் அவர் பயிற்சிக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.