ரணில் விக்கிரமசிங்கே மற்றும் ராஜபக்சே தரப்பு எம்பிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்தை நவம்பர் 21 ஆம் தேதி வரை சபாநாயகர் கரு ஜெயசூர்யா ஒத்திவைத்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை பதவி நீக்கம் செய்து அதிபர் சிறிசேனா ராஜபக்சேவை பிரதமராக தேர்வு செய்தார்.
இதையடுத்து ராஜபக்சேவை பிரதமராக நியமிக்க அதிபர் சிறிசேனாவுக்கு அதிகாரம் இல்லை எனவும் அதனால் நானே பிரதமராக நீடிப்பதாக ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்தார்.
மேலும் தனக்கு பெரும்பான்மை இருப்பதாகவும் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்கே கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அதிபர் சிறிசேனா அறிவித்தார். ஆனால் இதற்கு எதிராக இலங்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் நாடாளுமன்ற கலைப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
இதைத்தொடர்ந்து கூட்டப்பட்ட இலங்கை நாடாளுமன்ற குரல் வாக்கெடுப்பில் ராஜபக்சே தரப்பு பெரும்பான்மை இன்றி தோல்வி அடைந்ததாக சபநாயகர் கரு ஜெயசூர்யா அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில் இன்று மீண்டும் கூடிய நாடளுமன்றத்தில் ராஜபக்சே பேசினார். அப்போது, நான் அதிபராகவும், பிரதமராகவும் பதவி வகித்துள்ளேன், ஆகவே, பிரதமர் பதவி எனக்கொன்றும் பெரிதல்ல என பேசினார்.
பெரும்பான்மை இல்லாத நிலையில் ராஜபக்சே பேசியபோது இருதரப்பு எம்.பிக்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டது. ரணில் விக்கிரமசிங்கே ஆதரவு சபாநாயகர் கரு ஜெயசூர்யா மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தை நவம்பர் 21 ஆம் தேதி வரை சபாநாயகர் கரு ஜெயசூர்யா ஒத்திவைத்துள்ளார்.