கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில், நல்வாய்ப்பாக மீனவர்கள் உயிர் தப்பினர்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை ரோந்துக் கப்பல், தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த நபரின் விசைப்படகில் மோதியதில், படகு கடலில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஏழு மீனவர்களையும், மற்றொரு விசைப்படகில் வந்த மீனவர்கள் காப்பாற்றியதை அடுத்து, அனைவரும் கரை சேர்ந்துள்ளனர்.
இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீதும், படகுகள் மீதும் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்துவதாகவும், மத்திய, மாநில அரசுகள் இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கடலில் மூழ்கிய விசைப்படகிற்கு இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தியுள்ளனர்.