ரஃபேல் Vs ஜே.எஃப்.. இந்திய விமானப்படையை சமாளிக்க சீனாவை நாடும் பாகிஸ்தான்!

ரஃபேல் Vs ஜே.எஃப்.. இந்திய விமானப்படையை சமாளிக்க சீனாவை நாடும் பாகிஸ்தான்!
ரஃபேல் Vs ஜே.எஃப்.. இந்திய விமானப்படையை சமாளிக்க சீனாவை நாடும் பாகிஸ்தான்!
Published on

பிரான்ஸிடம் ரஃபேல் விமானங்களை இந்தியா வாங்கியதைபோல, பாகிஸ்தானும் தங்களது விமானப்படையை மேம்படுத்தும் நோக்கில் ஜே.எஃப்-20 போர் விமானங்களை சீனாவிடம் இருந்து வாங்க முயற்சி எடுத்து வருகிறது.

இந்திய விமானப்படையை மேம்படுத்தும் நோக்கில் பிரான்ஸில் இருந்து ரஃபேல் விமானங்களை இந்தியா இறக்குமதி செய்தது. பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து முதல் கட்டமாக ஜூலை 28-ஆம் தேதி 5 புதிய ரக ரஃபேல் விமானங்கள் இந்தியாவை வந்தடைந்தது. அவை, பிரதமர் நரேந்திர மோடியால் செப்டம்பர் 10-ஆம் தேதி துவக்கிவைக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக கடந்த 4-ம் தேதி மாலை 3 புதிய ரஃபேல் விமானங்கள் இந்தியாவை வந்தடைந்தன. அவை ஹரியானாவில் உள்ள அம்பலா விமான நிலையத்தில் தரையிறங்கின.இந்திய விமானப்படையில் மொத்தம் 8 ரஃபேல் விமானங்கள் தற்போது உள்ளன. இதில் 5 ரஃபேல் விமானங்கள் இந்திய விமானப்படைக்கு வந்த குறுகிய காலத்திலேயே லடாக்கின் சர்ச்சைக்குரிய பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்தியா ரஃபேல் விமானங்களை வாங்கியதைபோல் தற்போது பாகிஸ்தானும் தங்களது விமானப்படையை மேம்படுத்தும் நோக்கில் ஜே.எஃப்-20 போர் விமானங்களை வாங்க முயற்சி எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமானங்களை சீனாவிடம் இருந்து வாங்க முயற்சித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பே இந்தப் பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் நடத்திவந்தது.

ஆனால், விமானத்தின் விலையை கண்டு போர் விமானங்களை வாங்கும் திட்டத்தை பாகிஸ்தான் நிறுத்தி வைத்தது என்று பாகிஸ்தான் அரசு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன. ஆனால், தற்போது இந்தியா ரஃபேல் விமானங்களை அடுத்தடுத்து இறக்குமதி செய்ததன் எதிரொலியாக, பாகிஸ்தான் மீண்டும் ஜே.எஃப்-20 போர் விமானங்களை வாங்க முயற்சி எடுத்துவருகிறது. இந்தியா ரஃபேல் விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தினால், அதை சமாளிக்கும் பொருட்டு, போர் விமானங்களை வாங்க சீனாவை பாகிஸ்தான். அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் அரசுக்கு ஜே.எஃப்-20 போர் விமானங்களை வழங்க சீனாவும் முன்வந்துள்ளது. முதல்கட்டமாக சீனாவிலிருந்து 5 ஜே.எஃப்-20 போர் விமானங்களை வாங்க முயற்சி எடுத்துள்ளது. எனினும் இந்த விமானங்களின் விலை சரியாக தெரிவிக்கப்படவில்லை.

கடந்த சில ஆண்டுகளில், பாகிஸ்தான் விமானப்படையில் இருந்த ஜே.எஃப்-17 ஜெட் விமானங்களில் பெரிய குறைபாடுகள் காணப்பட்டன. பாகிஸ்தான் விமானப்படையில் சுமார் 40 ஜே.எஃப்-17 நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ளன. இவற்றில், ஒரு விதமான மின் அமைப்பு குறைபாடு, விமானியின் வெளியேற்றத்தில் குறைபாடுகளும் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால்தான் தற்போது புதிய விமானங்களை வாங்க சீனாவுடன் கைகோத்துள்ளது பாகிஸ்தான்.

ரஃபேல் Vs ஜே.எஃப்-17 Vs ஜே-20... எது சிறந்தது?!

இந்த மூன்று விமானங்களும் மல்டி-ரோல் போராளிகள் எனலாம். நீண்ட தூர வான்வழி - தரைவழி தாக்குதல்கள் உட்பட பல்வேறு வகையான செயல்பாடுகளைச் செய்யும் திறன்கொண்டவை இந்த மூன்று ஜெட்களும்.

ஜே.எஃப்-17 நான்காவது தலைமுறை விமானம் என்றாலும், ரஃபேல் 4.5 பொது "ஓம்னிரோல்" போர் விமானமாகும். இது ஒரு சோர்டியில் குறைந்தது நான்கு பயணங்களுக்கு செல்ல அனுமதிக்கிறது. ஜே-20 என்பது 5-வது தலைமுறை விமானம்.

ரஃபேல் மற்றும் ஜே.எஃப்-17 இரண்டும் ஒற்றை மற்றும் இரட்டை இருக்கைகளில் வருகின்றன. சீனாவின் ஜே-20, மறுபுறம் ஒற்றை இருக்கை மட்டுமே கொண்டது. இந்தியாவுக்கு 28 ஒற்றை இருக்கை ரஃபேல் ஜெட் விமானங்களும், எட்டு இரட்டை இருக்கைகள் கொண்ட ரஃபேல் ஜெட் விமானங்கள் பிரான்ஸ் கொடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எடையைப் பொறுத்தவரை, ஜே -20 எடை 19,000 கிலோ மற்றும் 37,013 கிலோ வரை எடையைக் கொண்டிருக்கும். ரஃபேல் 9,900 கிலோ -10,600 கிலோ எடை கொண்டது மற்றும் 24,500 கிலோ எடையை சுமக்க முடியும். ஜே.எஃப்-17 எடை 6,411 கிலோ, டேக்-ஆஃப் எடை 12,474 கிலோ. இதன் பொருள் ஜே -20 மற்றும் ரஃபேல் ஆகிய இரண்டும் தங்கள் பயணிகளின்போது அதிக ஃபயர் பவரை கொண்டு செல்ல முடியும்.

ரஃபேல் ஒரு மணி நேரத்திற்கு 2,222.6 கிமீ வேகத்தை அடைகிறது, அதேநேரத்தில் ஜே 20 மற்றும் ஜே எஃப்-17 முறையே அதிகபட்சமாக மணிக்கு 2,400 கிமீ வேகத்தையும், 1,975 கிமீ வேகத்தையும் கொண்டுள்ளது.

ரஃபேல் விமானத்தில் வான்வழி எம்.சி.ஏ ஏவுகணை உட்பட மிகவும் மேம்பட்ட மற்றும் ஆபத்தான ஆயுதங்களை எடுத்துச் செல்ல முடியும்; நீண்ட தூர தொலைவில் இருந்து வான்வழி தாக்குதல், ஏவுகணை தாக்குதல் நடத்தும் திறன்கொண்டவை. இதில் லேசர் வழிகாட்டப்பட்ட குண்டுகளையும், வழிகாட்டப்படாத கிளாசிக் குண்டுகளையும் கொண்டு செல்ல முடியும். ரஃபேலின் நீண்ட தூர ஏவுகணைகள் எதிரி எல்லைக்குள் ஆழமாக காயப்படுத்தலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ரஃபேலுக்கு மற்றொரு பெரிய நன்மை என்னவென்றால், ஒரு சண்டையின்போது நிமிடத்திற்கு 60,000 அடி வரை ஏறும் திறன் கொண்டது. ஜே.எஃப்-20 நிமிடத்திற்கு 59,842.52 அடி வரை ஏற முடியும். அதேநேரத்தில் ஜே.எஃப்-17 ஏறும் வேகம் நிமிடத்திற்கு 59,000 அடி மட்டுமே. மற்றொரு பெரிய வித்தியாசம் போர் அனுபவம். ரஃபேல் மிகவும் அனுபவம் வாய்ந்த விமானமாகும். இது ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரியாவில் போர் நடவடிக்கைகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ஜே.எஃப்-20, ஜே.எஃப்-17க்கு அத்தகைய அனுபவம் இல்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com