ஸ்பைடர் திருடன்
ஸ்பைடர் திருடன்மனோரமா

ஆந்திரா | 17 நாள் தேடுதல் வேட்டைக்குப்பின் கேரள போலீஸிடம் சிக்கிய ஸ்பைடர் திருடன்! அதிர்ச்சி பின்னணி

சிசிடிவியின் உதவியாலும், பேருந்து மற்றும் ஆந்திர மாநில போலீஸாரின் உதவியாலும் 17 நாட்கள் தேடுதலுக்குப் பிறகு ஸ்பைடர் திருடனை கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரள போலீஸார் ஆந்திராவில் கைது செய்துள்ளனர்.
Published on

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் சதீஷ் ரெட்டி (36). இவர் குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைத்து, யூடியூப் மூலம் ‘பெரிய பெரிய வணிக வளாகங்கள், சொகுசு வில்லாக்கள் மற்றும் மெகா கட்டடங்களில் கொள்ளையடிப்பது எப்படி?’ என்பதை கற்றுள்ளார். அதன் மூலம், கொள்ளையடித்தும், வழிப்பறி செய்தும் வந்துள்ளார். இதன் மூலம் கிடைக்கும் பணத்தைக்கொண்டு, பெங்களூரு கடப்பா மற்றும் விசாகப்பட்டினத்தில் நான்கு சொகுசு குடியிருப்புகளை வாங்கியதுடன், ஆடம்பரமாகவும் வாழ்ந்து வந்துள்ளார்.

நகைகடைகாரர்களுடன் நட்பு

தான் கொள்ளையடித்த தங்க நகைகளை ஆந்திரா அல்லது பெங்களூருக்கு கொண்டு சென்று, அங்கிருக்கும் தங்கநகை வியாபாரிகளிடம் பாதிவிலைக்கு விற்றுவிடுவது இவரது பழக்கம். இதற்காக சில நகை வியாபாரிகளை நண்பராக்கிக் கொண்டுள்ளார்.

மேலும் கொள்ளையில் ஈடுபடும்போது போலீசாரிடம் மாட்டிக்கொண்டால், நகை வியாபாரிகளிடம் பேசி தங்கநகைகளை போலீசிடம் ஒப்படைத்துவிடும்படி கூறிவிடுவாராம். அவர்களும் அதுபோலவே கொடுத்து விடுவார்களாம். பின் திருட்டு வழக்கில் சில மாதங்கள் சிறையிலிருந்து வெளிவந்து மறுபடி திருட்டில் ஈடுபடும் பொழுது, திருடிய தங்கத்தை அந்த தங்க வியாபாரிகளிடம் இலவசமாக கொடுத்து விடுவாராம் சதீஷ் ரெட்டி. இதனால் எந்த தங்க வியாபாரியும் போலீசாரிடம் இவரைப்பற்றி புகார் தெரிவிப்பதில்லை என்கிறார்கள்.

ஸ்பைடர் திருடன்
கேரளா: தவறான பாதையை காட்டிய கூகுள்மேப்.. வழி தவறிச் சென்று காருடன் தண்ணீரில் தத்தளித்த நண்பர்கள்!

சதீஷ் ஸ்பைடர் திருடனானது எப்படி?

சதீஷ்ரெட்டிக்கு பெரிய சுவர் என்பது சாதாரண விஷயமாம். சுவர் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் சிலந்தி போல நொடியில் ஏறிவிடுவாராம் அதனால் இவரின் பெயர் ஸ்பைடர் திருடன் என்றாகியுள்ளது. அதே போல் கொள்ளையடிக்கும் போது மறந்தும் ஆதாரத்தை விட்டு வைக்கமாட்டாராம். வெறும் 4 வது வரை படித்த ஸ்பைடர் திருடன் சதீஷ், தெலுங்கு, ஆங்கிலம் ஹிந்தி, தமிழ், மளையாளம் என்று பல மொழிகளும் அத்துப்படி என்கின்றனர் போலீஸார். 27 வயதில் ஆரம்பித்து, தற்போது 36 வயதிற்குள் கிட்டத்தட்ட 70 தாண்டிய கொள்ளை வழக்குகளை பெற்றிருக்கிறார் இந்த ஸ்பைடர் திருடன்.

ஸ்பைடர் திருடனும், ஹைடெக் திருடனும்!

ஸ்பைடர் திருடன் சதீஷ் ரெட்டியும், ஹைடெக் திருடன் பாண்டி சோரரும் கூட்டாளிகளாம். இவர்கள் இருவரும் பீகாரைச் சேர்ந்த முகமது இர்ஃபான் என்ற திருடனின் வழியை பின்பற்றுபவர்களாம். ஏனெனில், இவர்கள் திருடுவது பணக்காரர்களை குறிவைத்துதானாம். மேலும் எத்தனை பெரிய திருட்டு என்றாலும் ஒரே நாளில் கொள்ளையடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிவிடுவார்களாம்.

கேரள போலீசாரிடம் பிடிபட்டது எப்படி?

சம்பவ தினத்தன்று கேரளா மாநிலம் நெல்லிமூட்டில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளையடிக்க சென்றுள்ளார் ஸ்பைடர் திருடன் சதீஷ். அந்த வீட்டு சமயலறையானது ஜப்பானிய தொழில்நுட்ப முறையில் கட்டப்பட்டிருந்துள்ளது அதை எளிதில் அசைக்க முடியாது, இருப்பினும் அந்த வீட்டிற்குள் நுழைந்த ஸ்பைடர் திருடன் சதீஷ், சமையலறையின் ஜன்னலை நகர்த்தி இரண்டாவது தளத்தில் உள்ள அலமாரியில் இருந்த தங்கத்தை திருடியுள்ளார்.

மீண்டும் பழையபடி ஜன்னலை அடைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு அருகில் உள்ள வில்லாக்களுக்கு சென்றுள்ளார். ஆனால் அவருக்கு அங்கு எதுவும் கிடைக்காத நிலையில், அன்றிரவு வீடும் திரும்பியுள்ளார்.

ஸ்பைடர் திருடன்
கேரளா|சொந்த சைக்கிளுடன், அமைச்சர் கொடுத்ததும் காணாமல் போனதால் மாணவி விரக்தி; இறுதியில்நடந்த ட்விஸ்ட்

நகைகள் திருடுபோன வீட்டின் உரிமையாளார் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் கேரள போலீசார் தேடுதல் வேட்டையை ஆரம்பித்து இருக்கின்றனர். அதன் படி சிசிடிவியின் உதவியாலும், பேருந்து மற்றும் ஆந்திர மாநில போலீஸாரின் உதவியாலும் 17 நாட்கள் தேடுதலுக்குப் பிறகு ஸ்பைடர் திருடனை கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரள போலீஸார் ஆந்திராவில் கைது செய்துள்ளனர்.

அதன்பிறகு கடப்பாவில் உள்ள ஒரு தங்க நகைக்கடையில் திருடப்பட்ட நகைகளை போலீஸார் மீட்டுள்ளனர். இதற்கு முன் ஆந்திராவில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் வீட்டில் 7 கிலோ தங்கம் திருடிய வழக்கில் போலீசார் இவரை தேடி வந்தனர். அதற்கு முன் கடந்த ஏப்ரல் மாதம் காஞ்சிபுரத்தில் தங்க வியாபாரி ஒருவரின் வீட்டில் ஒன்றரை கிலோ தங்கத்தை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு பின் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இத்தனை வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் கேரளாவிலிருந்து போலீசார் வந்து தன்னை கைது செய்வார்கள் என்று சதீஷ் நினைக்கவில்லையாம். தற்பொழுது ஆந்திரா திருடன் கேரள சிறையில் இருக்கிறார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com