ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் பணியாற்றுபவர் அனுராதா ராணி. அவர் இன்று அதிகாலை 4 மணியளவில் மற்ற ஊழியர்களுடன் விமான நிலையத்திற்குள் நுழைந்துள்ளார். அப்போது, அவர் முழுப் பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்தப்படாமல் விமான நிலையத்திற்குள் நுழைந்துள்ளார்.
இதனால் அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் கிரிராஜ் பிரசாத் அவரை தடுத்து நிறுத்தியுள்ளார். மேலும், அனுராதாவை அருகிலுள்ள நுழைவாயிலில் விமானக் குழுவினரிடம் ஸ்கிரீனிங் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்.
ஆனால் அந்த நேரத்தில் பெண் சிஐஎஸ்எஃப் ஊழியர்கள் யாரும் அங்கு இல்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, பாதுகாப்பு சோதனையை முடிக்க பெண் சக ஊழியர் ஒருவர் அழைக்கப்பட்டுள்ளார். அவர் வருவதற்குள் கிரிராஜ் பிரசாத்துக்கும் அனுராதா ராணிக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்துள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அனுராதா ராணி, அந்த உதவி ஆய்வாளரின் கன்னத்தில் அறைந்துள்ளார் என ஜெய்ப்பூர் விமான நிலைய நிலைய அதிகாரி ராம் லால் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர், "ஸ்பைஸ்ஜெட் ஊழியரான அனுராதா ராணியிடம் சரியான விமான நிலைய நுழைவு அனுமதி இருந்தது. அவர், சிஐஎஸ்எஃப் பணியாளர்களால் தகாத மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தைகளுக்கு உட்படுத்தப்பட்டார். இதில் அவருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டுள்ளது.
ஆகையால், இந்த வழக்கில் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் காவல்துறையை அணுகியுள்ளோம். இந்த விஷயத்தில் நாங்கள் எங்கள் ஊழியருக்கு உறுதியாக நிற்கிறோம், அவருக்கு முழு ஆதரவையும் வழங்க உறுதிபூண்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
என்றாலும், பொது ஊழியரின் சேவையை தடுத்ததற்காக அந்தப் பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னதாக, கடந்த மாதம் பாஜக பெண் எம்பியும் நடிகையுமான கங்கனா ரனாவத்தை, சண்டிகரில் பணிபுரிந்த சி.ஐ.எஸ்.எஃப். பெண் வீரர் ஒருவர் கன்னத்தில் அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் லக்னோ விமான நிலையத்தில் கவுண்டரில் இருந்த ஊழியரை, தாமதமாக வந்த பெண் பயணி ஒருவர் அடித்தது விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது.