கொரோனா விரைவு செய்திகள் ஏப்ரல் 24 : புதிய கட்டுப்பாடுகள் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை!

கொரோனா விரைவு செய்திகள் ஏப்ரல் 24 : புதிய கட்டுப்பாடுகள் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை!
கொரோனா விரைவு செய்திகள் ஏப்ரல் 24 : புதிய கட்டுப்பாடுகள் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை!
Published on

> தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அத்தியாவசிய கடைகள் மட்டுமே கட்டுப்பாட்டுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. சலூன்கள், அழகு நிலையங்கள், உடற்பயிற்சி கூடங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா அதிக அளவு பரவுவதை தடுக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உணவகங்களில் அமர்ந்து சாப்பிடவும், தேனீர் கடைகளில் கூடவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாறாக பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விடுதிகளில் உள்ள உணவு கூடங்களிலும் அமர்ந்து உண்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களைத் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தனியாக செயல்படுகிற காய்கறி, மளிகை கடைகள் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதியில்லை. அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு பயிற்சி சங்கங்கள், கேளிக்கை கூடங்கள், மதுபான பார்கள், கூட்ட அரங்குகள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அனைத்து திரையரங்குகள் செயல்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும், தினமும் பூஜைகள் மட்டுமே நடைபெறுவதற்கு அனுமதிக்கப்படுவதாகவும் அரசு அறிவித்துள்ளது. பக்தர்களின்றி குடமுழுக்கு நடத்தலாம் எனவும், புதிதாக குடமுழுக்கு நடத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது என்றும், இறுதி ஊர்வலம் போன்ற சடங்குகளில் 25 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.டி. நிறுவனங்களில் 50 சதவீத பணியாளர்களுக்கு கண்டிப்பாக வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

> வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வருவதற்கு இ பதிவு கட்டாயம், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் நின்றுகொண்டு பயணிக்க தடை விதித்து மீண்டும் தமிழக அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி தவிர்த்து ஆந்திரா, கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டிற்கு வருவோர் இ பதிவு செய்து அதனை காண்பித்த பிறகே அனுமதிக்கப்படுவர். அதேபோல், வெளிநாட்டில் இருந்து விமானம், கப்பல் மூலம் தமிழகம் வரும் பயணிகளுக்கும் இ பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டப்படி, தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதியில்லை. வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து 3 பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது.

> முழு பொதுமுடக்க நேரத்தில் அநாவசியமாக வெளியே சுற்றுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தியுள்ள நிலையில், அவசர மருத்துவ தேவைகளுக்கும், உணவகத்தில் இருந்து பார்சல் கொண்டு செல்லும் நிறுவனங்களுக்கும், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் பணிகளுக்கும், இது போன்ற அத்தியாவசியத் தேவைக்காக மட்டுமே தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது என்றும் இதைத் தவிர வேறு எந்தவித வாகனங்களுக்கும் அனுமதி இல்லை எனவும் காவல்துறை கூறியுள்ளது. இதனை மீறி வரும் வாகனங்கள் மீது குற்றவியல் நடைமுறை பிரிவின் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

> மே 2 ஆம் தேதிக்குப் பிறகு இன்னொரு ஊரடங்கைத் தாங்கும் நிலையில் தமிழக மக்களும் இல்லை, அவர்களது வாழ்வாதாரமும் இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா இரண்டாம் அலை மே மாதத்தில் உச்சத்தை எட்டும் என்று வரும் செய்திகள் கவலையளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிப்பது கவலையளிப்பதாகவும், கடந்த 10 ஆம் தேதி ஐந்தாயிரத்து 989 ஆக இருந்த தொற்று தற்போது மூன்று மடங்கை தொடும் அளவுக்கு பரவுவதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒரே நாளில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா உலகின் முதல் நாடாக வந்திருப்பது இன்னொரு பக்கம் அதிர்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முதல் அலையின் அனுபவங்கள் மூலம் தொலைநோக்குத் திட்டத்தை தயாரிக்க தவறியதே இரண்டாம் அலையின் தாக்குதல் தீவிரமானதற்கு காரணம் என ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ஆக்ஸிஜன், தடுப்பூசி கையிருப்பை அதிகரிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் தீவிரமாக ஈடுபடுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். மே 2 ஆம் தேதிக்குப் பின் இன்னொரு ஊரடங்கைத் தாங்கும் நிலையில் தமிழக மக்களும் இல்லை, அவர்களது வாழ்வாதாரமும் இல்லை என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். எனவே, இடைக்கால அரசு இருக்கும் ஒரு வாரத்தில், கொரோனா பரவலைத் தடுத்திட அதிகாரிகள் அனைவரும் தீவிரமாக பணியாற்றுமாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

> தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல், தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 14 ஆயிரத்து 842 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 12 வயதுக்கு உட்பட்ட 557 சிறார்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரையிலான மொத்த கொரோனா 10 லட்சத்து 66 ஆயிரத்து 329 ஆக அதிகரித்துள்ளது. எனினும் ஆறுதல் அளிக்கும் வகையில் , ஒரேநாளில் 9 ஆயிரத்து142 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 9 லட்சத்து 52 ஆயிரத்து 186 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 80 பேர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 475 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 668 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 4 ஆயிரத்து 86 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரத்து 163 பேரும், கோவை மாவட்டத்தில் ஆயிரத்து 4 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 793 பேரும், மதுரை மாவட்டத்தில் 596 பேரும், நெல்லை மாவட்டத்தில் 525 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

> ஆக்ஸிஜன் பற்றாக்குறையை எதிர்கொள்ள முடியாததால் கொரோனா நோயாளிகளை வலுக்கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்யவிருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக டெல்லி தனியார் மருத்துவமனைகள் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளன. எனவே, தங்களது மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பு வழங்கிட உத்தரவிடுமாறு அவை கோரிக்கை விடுத்துள்ளன.

> டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ள நிலையில் அதற்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜனுக்கான அடிப்படை சுங்க வரியும் செஸ் எனப்படும் கூடுதல் வரியும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் பயன்பாடு சார்ந்த சாதனங்களுக்கான வரிகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், வரி ரத்து முடிவு 3 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. அரசின் இம்முடிவால் ஆக்சிஜன் விலை குறைவதுடன் அது தட்டுப்பாடின்றி கிடைக்கவும் வழி ஏற்படும் என மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. மேலும் இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜன் மற்றும் அதன் உற்பத்திக்கு உதவும் சாதனங்களுக்கு விரைந்து அனுமதி தரவும் சுங்க அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சமாளிக்க ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் சிறப்பு ரயில்கள் நாடெங்கும் இயக்கப்படுவதாகவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. சிங்கப்பூரில் இருந்து பிரமாண்டமான ஆக்சிஜன் கொள்கலன்கள் ராணுவ விமானங்கள் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

> தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகள் ஆக்சிஜன் தேவைக்கு 104 என்ற அவசர எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்களுக்கு மருத்துவ ஆக்சிஜன் விநியோகம் தொடர்பான சிக்கல்களை தீர்க்க, 24 மணி நேரமும் இயங்கும் கால் சென்டர் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ ஆக்சிஜன் தேவைப்படும் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் உடனடியாக 104 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

> அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் தேர்வு எழுதிய சுமார் ஒரு லட்சம் மாணவர்களின் தேர்வு முடிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அடுத்து என்ன செய்வது என மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். எதற்காக நிறுத்தி வைக்கப்பட்டது. கல்வியாளர்கள் கூறுவது என்னவென்று பார்க்கலாம். கொரோனா வைரஸின் கோரப்பிடியால் கடந்த ஆண்டு முதலே தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்தவேண்டிய பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஆன்லைன் மூலம் நடத்தியது. இதில், முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர மற்ற மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஏப்ரல் 11ஆம் தேதி வெளியிட்டது. ஆனால் சுமார் ஒரு லட்சம் மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டதால் மாணவர்களும் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மாணவர்கள் பலர் முறைகேட்டில் ஈடுபட்டதால் முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இணையவழி தேர்வின்போது மாணவர்கள் தலையை அசைக்கக்கூடாது, அறையில் சத்தம் கேட்கக்கூடாது, மாணவர்கள் அருகில் யாரும் நிற்கக்கூடாது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் விதிக்கப்பட்டன. இதனை பின்பற்றாததாலும், பெரும்பாலானோர் தேர்வுக்கட்டணம் செலுத்தாததாலும் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாகிகள் தகவல் கூறுகின்றனர். ஆனால், இது சரியான முடிவு கிடையாது என்றும் மாணவர்களுக்கு அடுத்து என்ன செய்வது என்ற குழப்பம் ஏற்படும் எனவும் கல்வியாளர்கள் கூறுகின்றனர். மாணவர்களுக்கு முறையான வழிகாட்டுதல்களை தேர்வுக்கு முன்கூட்டியே வழங்கியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். முறையான கணினி, இணைய வசதி இல்லை, வீட்டில் வெளிபுற சத்தம் கேட்காத வகையில் வசதியில்லை என மாணவர்கள் பலரும் விளக்கம் அளித்திருக்கின்றனர். இதனை பரிசீலித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் தேர்வு முடிவுகள் ஒரு வாரத்தில் வெளியாகும் என தகவல் கூறப்படுகிறது.

>தமிழகத்திற்கு மேலும் 4 லட்சம் டோஸ் கொரோனோ தடுப்பு மருந்துகள் பூனேவில் இருந்து வந்து சேர்ந்தன. இதில் 2 லட்சம் கோவிஷீல்டு மற்றும் 2 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் அடக்கம். தேனாம்பேட்டையில் உள்ள மாநில தடுப்பூசி குளிர்பதன கிடங்கிற்கு கொண்டு வரப்பட்ட தடுப்பூசிகள் அங்கிருந்து அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், நகர்ப்புற, கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகின்றன. தமிழகத்திற்கு இதுவரை 57 லட்சத்து 3 ஆயிரத்து 590 கோவிஷீல்டு மருந்துகளும் 10 லட்சத்து 82 ஆயிரம் கோவாக்சின் மருந்துகளும் என மொத்தம் 67 லட்சத்து 85 ஆயிரத்து 720 கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன. நேற்றைய நிலவரப்படி 10 லட்சத்து 34 ஆயிரம் தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்தது. தற்போது புதிதாக 4 லட்சம் டோஸ்கள் வந்துள்ளன. தமிழகத்தில் சராசரியாக நாளொன்றுக்கு ஒரு லட்சம் பேர் வரை தடுப்பூசி செலுத்துவதாக கூறும் சுகாதார துறை தற்போது கையிருப்பில் உள்ள மருந்து 13 நாட்களுக்கு போதுமானதாக இருக்கும் என்கிறது. ஆனால் பல தடுப்பூசி மையங்களில் இரண்டாவது டோஸ் கிடைக்காமல் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதும் நிகழ்கிறது.

> நாடு முழுவதும் தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் சீரம் இந்தியா நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை இருமடங்கு உயர்த்தியது. 250 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த ஒரு டோஸ் தடுப்பூசி, மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுமென சீரம் நிறுவனம் அறிவித்தது. ஏற்கனவே கொரோனா பாதிப்பால் இக்கட்டான சூழலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் மாநில அரசுகள், தடுப்பூசி விலையேற்றத்தால் அதிருப்தி அடைந்தன. மத்திய அரசுக்கு ஒரு விலை மாநில அரசுக்கு ஒரு விலையா என்ற கேள்வியும் எழுந்தது. தடுப்பூசிகளை இலவசமாக வழங்க வேண்டுமென மாநில அரசுகள் மத்திய அரசிடம் கோரிக்கையும் விடுத்தன. இதனை பரிசீலித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மாநில அரசுகளுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை இலவசமாக வழங்க முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளது. சீரம் நிறுவனத்திடம் தடுப்பூசிகள் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

> தடுப்பூசி உற்பத்தியை தயாரிக்கும் முன்பே அதற்கு சில வெளிநாட்டு நிறுவனங்கள் முன்பணம் தந்ததாகவும் எனவே அவற்றுக்கு முதல் கட்டத்தில் மட்டும் குறைந்த விலைக்கு கோவிஷீல்டு விற்கப்படுவதாகவும் அதை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிட்யூட் விளக்கம் அளித்துள்ளது. மேலும் இந்திய அரசுக்கு முதல் கட்டமாக விற்கப்பட்டமாக தடுப்பூசிகளும் குறைவான விலைக்கு தரப்பட்டதாகவும் சீரம் நிறுவனம் கூறியுள்ளது. தங்கள் தடுப்பு மருந்தின் இந்திய விலையையும் வெளிநாடுகளின் விலையையும் ஒப்பிடுவதே அர்த்தமற்றது என்றும் சீரம் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா தடுப்பூசி தேவை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் அவற்றின் உற்பத்தியை அதிகரிக்க பெரும் செலவில் கட்டமைப்பு வசதிகளை பெருக்க வேண்டியுள்ளதாகவும் சீரம் இன்ஸ்டிட்யூட் கூறியுள்ளது. மேலும் தங்கள் நிறுவனத்தின் விலைக்கொள்கை வெளிப்படையாக உள்ளதாகவும் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

> தூத்துக்குடியில் கொரோனா தொற்றின் பாதிப்பில் இருந்து தப்புவது, கொரோனா தொடர் சங்கிலியை தடுப்பது குறித்து மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எஸ்.பி ஜெயக்குமார் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கிவைத்து, சுகாதார பணியாளர்கள், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம், பழங்கள் வழங்கினார். அப்போது முழு முடக்க நாளில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க செல்வோர் அழைப்பிதழ்களை கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டும் என அவர் கூறினார்.

> ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்ன என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பார்க்கலாம். ஒருவருக்கு சளி, காய்ச்சல், இருமல், வாசனை உணர்வு இல்லாமை, சுவை உணர இயலாமை, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவைகள் இருந்தால் அது கொரோனாவுக்கான அறிகுறிகளாக கூறப்படுகிறது. எனவே அந்த நபர் உடனடியாக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது கொரோனா பரிசோதனை மையத்தை அணுகி ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பரிசோதனை செய்து கொண்ட பின்னர் முடிவு கிடைக்கும் வரை அந்த நபர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒருவேளை கொரோனா உறுதி செய்யப்பட்டால், பரிசோதித்த மையத்தின் உதவியுடன் அவர்கள் குறிப்பிடும் கொரோனா பராமரிப்பு மையம், கொரோனா சிகிச்சை மையம், மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று ரத்த பரிசோதனை, சிடி ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். குடும்பத்திற்கு ஒரு பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவி கட்டாயம் வைத்திருக்க வேண்டும். கொரோனாவுக்கான அறிகுறிகள் தெரிய தொடங்கியவுடன் பாதிக்கப்பட்ட நபர் உடலின் ஆக்சிஜன் அளவை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ஆக்சிஜன் அளவு 90க்கு கீழ் இருந்தால் நோயாளிக்கு ஆக்சிஜன் தேவை. அதேநேரம், ஆக்சிஜன் அளவு 90க்கு மேல் இருந்தால் பாதிக்கப்பட்டவர் வீட்டிலேயே தனியறையில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.

> இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை உச்சபட்ச பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நிர்பந்தம் சீரம் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்நிறுவனங்கள் தடுப்பூசிகளுக்கான மூலப்பொருள்களுக்கு அமெரிக்காவை சார்ந்திருப்பது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசிக்கான மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்கவேண்டும் என இந்தியா தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. எனினும் அமெரிக்க அரசு அதற்கு செவி சாய்ப்பதாக இல்லை.இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பிளிங்கென்னுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போடவே முன்னுரிமை அளிக்கிறோம் என பைடன் நிர்வாகம் பிடிவாதமாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகம் உள்ளநிலையில் அஸ்ட்ரஸென்கா உள்ளிட்ட கொரோனா தடுப்பு மருந்து மூலப்பொருட்களை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க வர்த்தக அமைப்பு வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரஷிதா தலிப், பைடனின் பிரசாரத்தின்போது நிதி திரட்டிய ஷேகர் நரசிம்மன்உள்ளிட்ட பலரும் இந்தியாவுக்கு தேவையான தடுப்பூசி மூலப்பொருட்களை அனுப்ப ட்விட்டரில் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com