சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. இதையடுத்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதுவரை இந்த மண்டல காலத்தில் 16 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
இந்நிலையில், அதிகாலை 3 மணிக்கு துவங்கி இரவு 11 மணி வரை தினமும் ஐயப்பனுக்கு விசேஷ பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. அந்த வரிசையில் ஐயப்பனுக்கு பிடித்த உணவு படைக்கும் 'நைதேயம்' நடைபெற்றது. இதற்காக விபூதி, பால், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், பன்னீர், தூயநீர் ஆகிய எட்டு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து ஐயப்பனுக்கு பிடித்த கதலிப்பழம், தேன், சர்க்கரை கலந்த 'திருமதுரம்' இடித்துப் பிழிந்த தேங்காய்பாலில், கதலிப்பழம், சர்க்கரை, சம்பா பச்சரிசி, சுக்கு, நெய் கலந்து தயாரிக்கப்பட 'மகா நைவேத்யம்' அரவணை, பச்சரிசி சாதம், அப்பம், பானகம் ஆகியன இன்று படைக்கப்பட்டன. சபரிமலையில் ஐயப்பனுக்கு நடந்த 'நைவேத்யம்' நிகழ்வை திரளான பக்தர்கள் கண்டு வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.