பிரான்ஸ் நாட்டுத் தயாரிப்பான ரஃபேல் போர் விமானத்தின் முக்கிய அம்சங்கள்..
ரஃபேல் போர் விமானத்தினை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் தயாரிக்கிறது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 3 ஆயிரத்து 700 கிலோ மீட்டர் தூரத்திற்குச் செல்லும் திறன் கொண்ட இந்த விமானம் அதிகபட்சமாக மணிக்கு 2 ஆயிரத்து 223 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் வல்லமை பெற்றது. எதிரிகளை அடையாளம் காண்பதற்கான ரேடார் எச்சரிக்கை கருவியும் ரஃபேல் போர் விமானத்தில் உள்ளது. இதில் துல்லியமாக இலக்குகளை தாக்கக்கூடிய ஏவுகணைகள் மற்றும் இதர அதிநவீன ஆயுதங்கள் ஆகியவற்றை பொருத்தலாம்.
ரபேல் போர் விமானத்தின் எடை சுமார் 10 டன் அதாவது, பத்தாயிரம் கிலோ இருக்கும் என்றும் எரிபொருள் மற்றும் ஆயுதங்கள் நிரப்பப்பட்டவுடன் 24 ஆயிரத்து 500 கிலோவாக அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. விமானத்தின் நீளம் 15.3 மீட்டர் கொண்டதாகவும், இறக்கையின் நீளம் 10.8 மீட்டர் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரபேல் விமானத்தின் உயரம் 5.3 மீட்டராகும். ஒரு ரஃபேல் விமானத்தின் விலை 731 கோடி ரூபாயாகும் 24 மணி நேரத்தில் 5 முறை ரஃபேல் மூலம் தாக்குதல் நடத்த முடியும்.