கர்நாடக சட்டப்பேரவையின் 3 உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் ரமேஷ் குமார் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சுயேச்சை எம்எல்ஏ சங்கர் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரமேஷ் ஜர்க்கிஹோலி, மகேஷ் கும்தஹள்ளி ஆகியோரை அவர்களின் பதவிக்காலம் முடியும் வரை தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் தெரிவித்தார். இவர்கள் நடப்பு பேரவையின் பதவிக்காலம் முடியும் வரை தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் சபாநாயகர் தெரிவித்தார். இந்த 3 எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவும் அவர்களின் சுய விருப்பத்தின் பேரில் எடுக்கப்பட்டதல்ல என தமக்கு தெரிய வந்ததால் கட்சித் தாவல் தடைச் சட்டப்படி அவர்களை தகுதி நீக்கம் செய்வதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.
பிற அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது என்ன நடவடிக்கை என 2 நாட்களில் அறிவிப்பதாகவும் சபாநாயகர் கூறியுள்ளார். கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்துள்ள நிலையில் அடுத்து பாஜக ஆட்சியமைக்கும் முனைப்பில் உள்ளது. இந்நிலையில் எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது