மும்பை ரயில் நிலையத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைச் சந்திக்கச் சென்ற பாலிவுட் நடிகர் சோனு சூட் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் சோனு சூட் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகிறார். அண்மையில் கூட கேரளாவில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒடிசா மாநிலச் சேர்ந்த 150 பெண்களைத் தனது சொந்த செலவில் ஒடிசாவுக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் மும்பை பந்த்ரா ரயில் நிலையத்தில் ஷார்மிக் சிறப்பு ரயிலில் உத்தரப்பிரதேசம் செல்ல இருந்த தொழிலாளர்களை சோனு சூட் பார்க்கச் சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்த அதிகாரிகள் அவரைப் பார்க்க விடவில்லை எனத் தெரிகிறது.
இது குறித்து மும்பை நிர்மல் நகர் காவல் அதிகாரி சஷிகாந்த் கூறும் போது “ நடிகர் சோனு சூட் ரயில்வே நிலைய காவல் அதிகாரிகளால் தடுத்த நிறுத்தப்பட்டுள்ளார். எங்களால் தடுத்த நிறுத்தப்படவில்லை. அவர் இது குறித்த எந்தப் புகார்களும் தரவில்லை” எனக் கூறினார்.
முன்னதாக சிவசேனா கட்சியின் எம்.பி சஞ்சய் ரவுத் “ மகாராஷ்டிராவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் தவித்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சோனு சூட் உதவி செய்ய வந்ததைக் கேள்விப்பட்டு ஆச்சரியமடைந்தேன். அவரை பாஜகதான் இயக்குகிறது. மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே ஆட்சிக்குக் களங்கம் விளைவிக்க பாஜக எடுத்திருக்கும் அரசியல் உள்நோக்கம் தான் இந்தச் செயல்” என அவர் குற்றம் சாட்டியிருந்தார்.