நடிகையும், பாஜக பிரமுகருமான சோனாலி போகத் கொலை செய்யப்பட்டதை குற்றவாளிகள் ஒத்துக்கொண்ட நிலையில், கடைசியாக கோவா ஓட்டலில் தள்ளாடியபடியே செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
அரியானா மாநிலத்தைச் சேர்ந்த நடிகையும், பாஜக நிர்வாகியுமான சோனாலி போகத், கடந்த 22-ம் தேதி இரவு கோவாவில் பார்ட்டிக்கு சென்றநிலையில், 23-ம் தேதி அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக முதலில் கூறப்பட்டது. பின்னர், அவரது குடும்பத்தினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து, சோனாலி போகத்தின் உதவியாளர்களே கொலை செய்திருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறினர்.
இதுகுறித்து கோவா காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டநிலையில், சந்தேகத்திற்குரிய மரணமாக வழக்கு பதிவு செய்து சோனாலியின் உதவியாளர்களான சுதிர் சங்வான் மற்றும் சுக்விந்தரிடம் கோவா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதன்பின்னர் சோனாலி போகத்தின் உடற்கூராய்வு பரிசோதனை அறிக்கையில், அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்காக பதிவுசெய்த போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர்.
இதற்கிடையில் சோனாலி போகத்தின் உடல் அவரது சொந்த ஊரான ஹரியானா மாநிலம் ஹிசாருக்கு விமானம் மூலம் கொண்டு இன்று கொண்டுவரப்பட்டது. அங்கு அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி சென்றனர். இதனைத் தொடாந்து மாலை அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டது. சோனாலியின் உடலை அவரது மகள் அழுதுக்கொண்டே எடுத்துச் சென்றது பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட சோனாலி போகத்தின் உதவியாளர்கள் அவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். பார்ட்டிக்கு முன்னதாக (MDMA - methylenedioxymethamphetamine) என்ற கெமிக்கலை, 1.5 கிராம் அளவு சோனாலி போகத்தின் குளிர்பான பாட்டிலில் கலந்து கட்டாயப்படுத்தி குடிக்க கொடுத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் கடைசியாக பார்ட்டி நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சியை போலீசார் சேகரித்திருந்தனர். அதில் சோனாலி போகத் தள்ளாடியபடியே செல்ல, அவரை கைத்தாங்கலாக ஒருவர் அழைத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. கைத்தாங்கலாக அழைத்துச் செல்லும் நபர், சோனாலி போகத்தின் உதவியாளர் சுதிர் சங்வான் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து கைதுசெய்யப்பட்ட சோனாலி போகத்தின் உதவியாளர்கள் சுதிர் சங்வான் மற்றும் சுக்விந்தர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அத்துடன் கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவர், அரியானா மாநிலத்தின் முன்னாள் அமைச்சருடன் தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவருவதால், மேலும் விசாரணையில் கூடுதல் தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.